சென்னையில் தொழிலதிபரை கொன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றி கால்வாய் ஓரம் வீசி விட்டுச் சென்ற கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கரன். அவர் ரியல் எஸ்டேட், கட்டுமானம், பைனான்ஸ் ,சினிமா தயாரிப்பு உள்ளிட்ட பல தொழில்கள் செய்து வந்தார்.
நேற்று (செப்டம்பர் 2) மாலை குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, அண்ணா சாலை பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் விழாவுக்கு செல்ல வேண்டும் தயாராக இருங்கள் என்று தொழிலதிபர் பாஸ்கரன் கூறியுள்ளார்.
விழாவில் கலந்து கொள்ள அனைவரும் தயாராக காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் பாஸ்கரன் வீட்டுக்கு வரவில்லை.
இதையடுத்து அவரது மகன் கார்த்திக் ஜிபிஎஸ் கருவி மூலம் கார் விருகம்பாக்கம் பகுதியில் இருப்பதை அறிந்து அங்கு சென்று பார்த்தார்.
கார் கேட்பாரற்று கிடந்தது. இதையடுத்து அந்த பகுதியில் சுற்றி பார்த்துவிட்டு, ஆதம்பாக்கம் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 3) காலை நெற்குன்றம் சின்மயா நகரில் பாலித்தின் கவரில் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று இருப்பதை அந்தப்பகுதியில் துப்புரவு தொழிலில் ஈடுபடும் சிலர் பார்த்து போலீசிடம் தெரிவித்துள்ளனர்.
அங்கு வந்த போலீசார் அந்த கவரை பிரித்து பார்த்தபோது அதில் கை, கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி வைத்து அடைக்கப்பட்ட 62 வயதான ஆணின் சடலம் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர் காணாமல் போன தொழிலதிபர் பாஸ்கரன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று மாலை முதல் பாஸ்கரனின் வங்கிக்கணக்கில் இருந்து லட்சக்கணக்கான பணம் ஏடிஎம்மில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
எனவே பணத்திற்காக யாராவது அவரை கடத்தி கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். கொலையாளிகளை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
கலை.ரா
நித்தியின் உடல்நிலை மோசமாக இருக்கிறது : கைலாசாவின் கடிதம்!