போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தத்தால் தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கும் பேருந்துகள் விபத்துகுள்ளாவது பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிஐடியு, அண்ணா உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜனவரி 9) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல்வேறு பகுதிகளுக்கு உரிய நேரத்தில் பேருந்துகள் இயங்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்த அறிவிப்பால் தற்காலிக ஓட்டுநர்களை வைத்து அரசு பேருந்துகளை இயக்கி வருகிறது. ஆனால் தற்காலிக ஒட்டுநர்கள் இயக்கும் பேருந்துகள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருவதால் மக்கள் அரசு பேருந்துகளில் பயணிப்பதற்கு அச்சப்படுகின்றனர்.
நேற்று நெல்லையில் இருந்து ராஜவல்லிபுரம் பாலாமடைக்கு தற்காலிக ஓட்டுநர் மூலம் இயக்கப்பட்ட பேருந்து ஒன்று சேற்றில் சிக்கியது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி ஆரல்வாய்மொழியில் தற்காலிக ஓட்டுநர் ஓட்டிய பேருந்து கடை ஒன்றின் முகப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கடையில் வைத்திருந்த சில பொருட்கள் சேதமடைந்தன.
Ìii
விழுப்புரத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து திண்டிவனத்தில் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் தேங்கியிருந்த மழைநீரில் சிக்கிக் கொண்டது.
இந்நிலையில், இன்று கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பணிமனையிலிருந்து மார்த்தாண்டத்திற்கு தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசு பேருந்து மற்றொரு அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. பிரேக் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தொடர்ந்து தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கும் பேருந்துகள் விபத்தில் சிக்குவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இதற்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் இல்லையென்றால் பொங்கல் நேரத்தில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு சிரமம் ஏற்படும் என்றும் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
100 சதவிகிதம் பேருந்துகள் இயக்கமா? – செளந்தரராஜன் பதில்!
9 வருடம் கழித்து பிறந்த மகனை கொன்றது ஏன்?… பெண் CEO அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!