வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை தொழிற்சங்கத்தினர் தாக்க முயன்றதால் பரபரப்பான சூழல் நிலவியது.
காலியாக உள்ள ஒட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்று (ஜனவரி 9) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பல்வேறு பகுதிகளில் சரியாக பேருந்து இயங்காததால் மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டம் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மீது தொழிற்சங்கத்தினர் தாக்குதல் நடத்த முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் பணிமனையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிற்சங்கத்தினர் அங்கு நடத்துநர் இல்லாமல் புறப்பட்ட பேருந்தை வழிமறித்தனர். பின்னர் நடத்துநர் இல்லாமல் பேருந்தை எப்படி இயக்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் ஒட்டுநரை தாக்க முயன்றனர்.
ஆனால் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் தொழிற்சங்கத்தினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பணிமனையில் இருந்து புறப்பட்டது.
இதே போல் விழுப்புரம் புதிய பேருந்து நிறுத்தத்திலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் தொழிற்சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதால் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்க முயன்றதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதனால் பணிமனைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
நான்கு வயது மகனைக் கொன்று… நாடகமாடிய பெண் அதிகாரி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்!
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு!