பல மடங்கு கட்டணத்தை உயர்த்திய ஆம்னி பேருந்துகள்: பயணிகள் கவலை!

தமிழகம்

சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.

பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல் ஆகிய நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும், ஆம்னி பேருந்துகள் வழக்கமான கட்டணத்தை விட பல மடங்கு உயர்த்துவது தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை நாட்கள் ஆகும். இதனையொட்டி சென்னையில் இருந்து வெளியூர் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகரித்துள்ளது.

சென்னையில் இருந்து மதுரைக்கு பேருந்தில் செல்ல வழக்கமாக ஆம்னி பேருந்துகளில் அதிகபட்சமாக ரூ.700 வரை வசூலிக்கப்படும்.  ஆனால் தொடர் விடுமுறை காரணமாக இந்த தொகையானது ரூ.1700 வரை, அதாவது இரு மடங்குக்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஓசூரிலிருந்து கோவில்பட்டிக்கு செல்ல வழக்கமாக ரூ.800 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது பேருந்து ஒன்றில் ரூ. 3949 வசூலிக்கப்படுகிறது. இது நான்கு மடங்கு அதிகமான தொகையாகும். சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லக்கூடிய பேருந்துகளில் ரூ.2300 வரை வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லக்கூடிய பேருந்து கட்டணம் ரூ.2000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த, சித்திரை திருநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் கட்டணம் அதிகமாக வசூலித்தன. அப்போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆம்னி பேருந்து நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆம்னி பேருந்துகள் கட்டணம் அதிகமாக வசூலித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது வழக்கமான கட்டணத்துக்கும் அதிகமாக வசூலித்த தொகையை சம்பந்தப்பட்ட பேருந்து நிர்வாகத்தினரிடமிருந்து வசூலித்து மீண்டும் பயணிகளிடமே கொடுத்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக வசூலித்தால், 1800 425 6151, 044-2474 9002 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று போக்குவரதுத் துறை அறிவித்தது. இருப்பினும் ஆம்னி பேருந்துகள் தொடர் விடுமுறை நாட்களில் கட்டணங்களை பல மடங்கு உயர்த்துவது வாடிக்கையாகி வருகிறது.

ஏறத்தாழ 4000 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வளவு விலையை கொடுத்து பயணிக்க வேண்டுமா? என்னதான் அரசு உத்தரவு போட்டாலும் ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளை மட்டும் நின்றபாடில்லை என்கின்றனர் பயணிகள்.

செல்வம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *