சென்னையில் உள்ள பஸ் டிப்போக்களை பொதுமக்கள் – தனியார் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் வணிக வளாகமாக மாற்ற மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு ரூ.1,543 கோடி செலவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் முப்பதுக்கும் மேற்பட்ட பேருந்து டிப்போக்கள் உள்ளன. இவற்றில் இருந்து தினசரி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இவற்றில் மூன்று பஸ் டிப்போக்களை மேம்படுத்த மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி திருவான்மியூர் பஸ் டிப்போ ரூ.446 கோடி மதிப்பிலும், வடபழனி பஸ் டிப்போ ரூ.610 கோடி மதிப்பிலும், வியாசர்பாடி பஸ் டிப்போ ரூ.485 கோடி மதிப்பிலும் நவீன மயமாக்கப்படவுள்ளது.
குறிப்பாக, பல்வேறு வசதிகளுடன் கூடிய வணிக வளாகமாக மாற்றப்படவுள்ளது.
பொதுமக்கள், தனியார் பங்களிப்பு என்ற முறையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள மாநகர் போக்குவரத்துக் கழகம் டெண்டர் கோரியுள்ளது.
இதன்படி, தரைத் தளம் மற்றும் முதல் தளம் பேருந்துகளை நிறுத்துவதற்கான இடமாக பயன்படுத்தப்படும். இரண்டாவது தளம் பேருந்து டிப்போ மற்றும் வணிகக் கடைகள் இருக்கும் தளமாக இருக்கும்.
மீதம் உள்ள தளங்கள் அனைத்தும் வணிக நிறுவனங்கள் உள்ள தளமாக அமைக்கப்படும். இவற்றில் தியேட்டர், உள் அரங்க விளையாட்டுகள், கூட்ட அரங்கம் ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே சென்னையில் உள்ள அடையாறு பஸ் டிப்போவை ஒன்பது மாடிகள் கொண்ட வணிக வளாகமாக மாற்ற சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு ரூ.993 கோடி செலவு ஆகும் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டுமான பணிகள் தொடங்கி 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் கட்டுமானப் பணிகள் முடியும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இங்கு உள்ள வணிக வளாகங்கள் மூலம் ரூ.120 கோடியும், மற்றவை மூலம் ரூ.6 கோடியும் என மொத்தம் ரூ.126 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ராஜ்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!