போகி அன்று தேவையற்ற பொருட்களை எரிக்க வேண்டாம் என்றும் எரிக்க நினைக்கும் பொருட்களை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களிடம் இன்று (ஜனவரி 8) முதல் ஒப்படைக்கலாம் என்றும் சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
போகிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பயன்பாட்டில் இல்லாத, போகி அன்று எரிக்க நினைத்து எடுத்து வைத்துள்ள பொருட்களான பழைய துணி, டயர், ரப்பர் டியூப் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றை எரிப்பதை தவிர்த்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள ஒன்று முதல் பதினைந்தாவது வரையிலான மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும், மக்கள் தங்களிடம் உள்ள தேவையில்லாத பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து,
அவற்றை தனியாக மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களிடம் இன்று (ஜனவரி 8) முதல் ஒப்படைக்குமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களில் ஆடியோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு விளம்பரப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-ராஜ்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
மக்கள் ஐடி எதற்கு?: சீமான் கேள்வி!
திருமா வாழும் கிறிஸ்து, வாழும் நபியா? மணிவிழா மேடையில் சலசலப்பு!