திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலை சுற்றி விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது யார் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
குளித்தலையை சேர்ந்த மகுடேஸ்வரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், “தமிழகத்தில் பழமையான கோவில்கள், கோபுரங்கள் உள்ள பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டடங்களை கட்டக் கூடாது என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
திருச்சி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் அரசாணையை மதிக்காமல் சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்டி உள்ளனர்.
1997 ஆம் ஆண்டு அரசாணை படி கோவிலைச் சுற்றி 1 கிலோமீட்டர் தூரம் வரை கட்டிடங்கள் கட்ட கூடாது என்றும் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடங்கள் கட்ட கூடாது என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அரசாணையை மீறி அப்பகுதியில் 73 கட்டிடங்கள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கோயிலில் இருந்து 100 மீட்டருக்குள் கட்டப்பட்டுள்ளன. கோயில் அருகே அமைந்துள்ள உத்தர வீதி ,சித்திர வீதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
விதிகளை மீறி பல கட்டிடங்கள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ளன. விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்ற வேண்டும்” என்று கேட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த இடங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது யார் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
கலை.ரா
விரைவில் திமுக பொதுக்குழு : மு.க.ஸ்டாலின் ஆலோசனை!