பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைப்பு: 1,200 வீடுகள் அகற்றம்!

தமிழகம்

சென்னையின் மையப்பகுதியில் பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டியுள்ள 1,200 கான்கிரீட் மற்றும் குடிசைகள் அகற்றப்பட்டு  2.9 கி.மீ நீள பகுதியை சீரமைக்க நீர்வளத் துறை முடிவு செய்துள்ளது. 

சென்னை மத்திய பக்கிங்ஹாம் கால்வாய் மறுசீரமைப்பு குறித்து, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி தலைமையில் சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது.

அதன்படி, சேப்பாக்கம் சுவாமி சிவனாந்தா சாலை முதல் ஆர்.கே.மடம் வரை 2.9 கி.மீ நீளமுள்ள பகுதிகள் தூர்வாரி சீரமைக்கப்பட உள்ளன.

தமிழக நீர்வளத் துறை, சென்னை மாநகராட்சி, சுற்றுச்சூழல் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உள்ளிட்டவை இணைந்து மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், “பக்கிங்ஹாம் கால்வாயில் முதற்கட்டமாக 2.9 கி.மீ நீளத்தில் மறுசீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக, சேப்பாக்கம் சுவாமி சிவனாந்த சாலை முதல் ஆர்.கே.மடம் வரை 2.9 கி.மீ நீளத்துக்கு துார்வாரப்பட உள்ளன.

மேலும், கரையோரம் 1,200 கான்கிரீட் மற்றும் குடிசைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவர்கள், கழிவுநீர் இணைப்புகளை நேரடியாக பக்கிங்ஹாம் கால்வாயில் இணைத்துள்ளனர். 

அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து, ஆக்கிரமிப்பாளர்களிடம் ஏற்கெனவே ஆலோசித்துள்ளோம். அவர்களுக்கு மாற்றுக் குடியிருப்பு வழங்குவது குறித்து, ‘பயோமெட்ரிக்’ முறையில் பதிவு செய்யப்பட உள்ளது. இதற்காக, அவர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவுள்ளது.

இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டப்பின், பக்கிங்ஹாம் கால்வாயில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, துார்வாரப்படும். 

சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, கரையோரங்களில் மூலிகை செடிகள், மரங்கள், பூச்செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.

இந்தப் பணிகள் முடிந்தப்பின், மற்ற இடங்களில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா தேர்தல்: ஓபிஎஸ் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

“மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்த மத்திய அரசு”: சக்கரபாணி

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *