நெல்லையில் பட்டியலின சிறுவன் மீது நேற்று கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, 8 பிரிவுகளில் இன்று (நவம்பர் 5) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாட்டம் கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுவன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 17 வயதான இவர் அருகிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று மதியம் தனது வீட்டருகே அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, காரில் வேகமாக வந்த ஆதிக்க சாதியினர் அவரை மோதுவது போல் சென்றுள்ளனர்.
இதனால் கோபமான சிறுவன், காரை ஓட்டியவர்களிடம் மெதுவாக ஓட்டிச் செல்லும்படி கூறியுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்ட நிலையில், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
எனினும் மாலையில் அரிவாளுடன் சிறுவனின் வீட்டுக்கு சென்ற ஆதிக்க கும்பல், தனியாக இருந்த சிறுவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சிறுவனின் தலையிலும் காலிலும் அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர், மேலும் மதுபாட்டிலை உடைத்து அவரை தாக்கியுள்ளனர்.
தொடர்ந்து வீட்டில் இருந்த நாற்காலி, விசிறி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சூறையாடிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். செல்லும் போது தெருவில் இருந்த பட்டியலின மக்களையும் அரிவாளை காட்டி மிரட்டியதுடன், சாதி ரீதியாக திட்டியுள்ளனர்.
இதுகுறித்து வேலைக்கு சென்றிருந்த சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பதறியடித்து வந்த அவர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த மகனை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் தாயார் பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி, சாதி ரீதியாக திட்டுதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
இதற்கிடையே, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இந்து கோவிலை தாக்கிய கும்பலில் இருந்த கனடா போலீஸ்… காட்டிக் கொடுத்த வீடியோ!
ஈரான் நாட்டில் வாழும் யூதர்கள்… 20 வயது இளைஞருக்கு தூக்கு!