கடலூர் அருகே ஆவினங்குடியில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்குவதால் விவசாயிகள் கடுங்கோபத்தில் உள்ளனர்.
கடலூர் மாவட்டம் ஆவினங்குடி பகுதியைச் சுற்றி கொட்டாரம், வையங்குடி, நெய்வாசல், கொடிக்களம், செங்கமேடு, திருவட்டத்துறை, பட்டூர் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இங்கு சுமார் 3000 ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது. ஆனால் ஆவினங்குடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இல்லை. இதனால் விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு வாணிப கழக மண்டல மேலாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினர்.
இதில், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில், “ திட்டக்குடி -பெண்ணாடம் மெயின்ரோட்டில் ஆவினங்குடியில் 1 ஏக்கர் இடம் தருவதற்கு தயாராக உள்ளோம். அதனால் எங்கள் ஊருக்கு புதியதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும்” என்று ஊர்மக்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இந்தசூழலில் ஆவினங்குடியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க உத்தரவிட்டு கடந்த ஜூலை 22ஆம் தேதி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டும், கடந்த சில நாட்களாக நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் தமிழரசன் கூறுகையில், “கடந்த 22ஆம் தேதி ஆவினங்குடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அடுத்த மூன்று நாட்களில் 891 சிப்பம் நெல் கொள்முதல் செய்தனர். 25ஆம் தேதி நெல் கொள்முதல் செய்யப்படவில்லை.
26, 27 ஆகிய தேதிகளில் சுமார் 900 மூட்டை கொள்முதல் செய்யப்பட்டது. அதன் பிறகு இன்று காலை வரை நெல் கொள்முதல் செய்யப்படவில்லை.
50 கிலோ எடை பிடிக்கும் சாக்கில் 40 கிலோ நெல்தான் கொள்முதல் செய்யப்பட வேண்டும்.
ஆனால் ஒரு மூட்டைக்கு 41 கிலோ எடை வைத்து கொள்முதல் செய்கின்றனர். இது விவசாயிகளுக்கு நஷ்டம் தான்.
இது தவிர கொள்முதல செய்ய லோடுமேனுக்கு 5 ரூபாய் என ஒரு மூட்டைக்கு 45 ரூபாய் வீதம் விவசாயிகளிடம் இருந்து லஞ்சமும் வாங்கிக் கொள்கின்றனர்.
2023க்கு முன்பாக லோடுமேனுக்கு ரூ.2.50 கூலியாக கொடுக்கப்பட்டது. தற்போது 10 ரூபாய் கொடுக்கப்படுகிறது. இருந்தாலும் விவசாயிகளிடம் தனியே வசூல் செய்கிறார்கள்.
இதில் லஞ்சமாக வாங்கும் 45 ரூபாயில் பி.சி. (பருவகால பட்டியல் எழுத்தர்) 17 ரூபாய் மட்டுமே கொடுப்பதால் லோடு மேன்கள் தங்களுக்கு கட்டுப்படியாகவில்லை என்று கூறி பணிக்கு வருவது இல்லை. இதனால் கடந்த சில நாட்களாக நெல் கொள்முதல் நிலையம் செயல்படவில்லை.
தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால் விவசாயிகள் பதற்றமான சூழலில் இருக்கிறார்கள்.
இந்த கொள்முதல் நிலையத்தில், ஹெல்ப்பராக இருக்க வேண்டிய சுரேஷை பி.சி. ஆக போட்டிருக்கிறார்கள். மேஸ்திரியாக விமல் இருக்கிறார். இவர், கூகுள் ஜி பேவில் பணம் அனுப்ப சொல்லி விவசாயிகளிடம் வசூலிக்கிறார். ஏற்கனவே கொள்முதல் செய்த மூட்டைகளுக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விவசாயிகளிடமிருந்து லஞ்சம் வசூலித்துவிட்டனர்.
இதை லோடுமேன், ஹெல்பர், பிசி, டிஎம் என உள்ளூரில் இருக்கும் அதிகாரிகள் வாடஸ்அப் குழுக்கள் வைத்துக்கொண்டு பகிர்ந்துகொள்வதாக தெரிகிறது.
இத்தனைக்கும் இந்த கொள்முதல் நிலையத்துக்காக தனியார் இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தோம். அப்போது மின் வசதி கூட கொடுக்கவில்லை. வாடகைக்கு ஜெனரேட்டரை நாங்களே எடுத்து வந்து கொடுத்தோம்.
இன்றுதான் மின்சாரம் கொடுத்திருக்கிறார்கள். இவர்களுக்குள் இருந்த பிரச்சினை எப்படி தீர்த்துக்கொண்டார்கள் என தெரியவில்லை. இன்று மீண்டும் சுமார் 250 சிப்பம் கொள்முதல் செய்திருக்கிறார்கள். இன்று நெல்லை விற்பனை செய்த விவசாயிகளிடமும் லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள்.
ஆவினங்குடி நெல்கொள்முதல் நிலையத்தின் பிரச்சினை குறித்து தமிழ்நாடு வாணிப கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரையின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று கூறினார்.
முன்னதாக ஆவினங்குடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட போது ”விவசாயிகள் கவனத்திற்கு” என அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
அதில் முதல் அறிவிப்பாக நெல்லை விற்பனை செய்திட யாருக்கும் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புகார் அளிக்க வேண்டுமென்றால் முதுநிலை மண்டல மேலாளரை தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு அலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆவினங்குடி விவசாயிகளின் புகார் தொடர்பாக பேசுவதற்கு அந்த எண்ணை நாம் தொடர்புகொண்டோம்.
அதில் பேசியவர், “எனக்கு இந்த விவரம் பற்றி தெரியாது. நான் திருப்பூரில் இருந்து பேசுகிறேன். 3 வருடமாக இந்த எண்ணை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். இதுபோன்றுதான் எனக்கு அடிக்கடி அழைப்பு வருகிறது” என்று அழைப்பை துண்டித்துவிட்டார்.
அடப்பாவிகளா…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பால் பெருவெள்ளம் !
அருந்ததியர் 3% இட ஒதுக்கீடு… உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு!