சத்குரு
சுவாசத்தின் செயல்பாடு குறித்தும், அதனை எப்படி மாபெரும் சாத்தியங்களுக்கான வாயிலாகப் பயன்படுத்த முடியும் என்பதையும் சத்குரு எடுத்துரைக்கிறார்.
ஒருவரது விழிப்புணர்வு தேவையான கூர்மையும், தீவிரத்தன்மையும் அடைந்தால், அவர் இயல்பாகவே விழிப்புணர்வு பெறும் முதன்மையான விஷயங்களுள் ஒன்று சுவாசம். இடைவிடாமலும், தொடர்ச்சியாகவும் உடலில் இயந்திரகதியான ஒரு செயலாக சுவாசம் இருக்கும் நிலையில், அதைப் பற்றிய உணர்வில்லாமல் பெரும்பாலான மனிதர்களும் எப்படி வாழ்கின்றனர் என்பது உண்மையில் வியப்பானது. ஆனால் சுவாசம் உங்களது விழிப்புணர்வுக்குள் வந்துவிட்டால், அது ஆச்சரியமூட்டும் வழிமுறையாகிறது. இன்றைக்கு மூச்சைக் கவனிப்பது என்பது பெரும்பாலும் பயிற்சி செய்யப்படும் தியான முறையாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. அது மிக அடிப்படையானது மற்றும் எளிமையானது. அதற்கு எந்த முன்னேற்பாடும் தேவைப்படாத அளவுக்கு அது மிகச் சுலபமாகவும், இயல்பாகவும் அமைகிறது.
நீங்கள் சற்று அதிகமான கவனமுடையவரானால், சுவாசமானது இயல்பாகவே உங்கள் விழிப்புணர்வுக்குள் வந்துவிடும். நான் சுவாசத்தை அனுபவித்து உணரத் தொடங்கியபோது எனக்கு ஆறு அல்லது ஏழு வயதாக இருந்தது. என்னுடைய சின்ன நெஞ்சுக்கூடும், வயிறும் இடையறாத ஒரு இலயத்தில் அசைந்ததைக் கவனித்துக் கொண்டிருந்ததே மணிக்கணக்காக என்னை ஆர்வமுடனும், ஈடுபாட்டுடனும் வைத்திருந்தது. வெகு காலத்திற்குப் பிறகுதான் தியானம் குறித்த எண்ணம் என் வாழ்க்கையில் இடம் பிடித்தது. ஆனால், நீங்கள் ஒரு துளியளவு உணர்வானவராக இருந்தாலும், முடிவில்லாமல் நிகழ்ந்துகொண்டிருக்கும் சுவாசத்தின் எளிய இலயத்தை உங்களால் அலட்சியம் செய்யமுடியாது.
பெரும்பாலான மக்களும், அவர்களது உடல் நுரையீரல் இழுப்பு அல்லது மூச்சிரைப்புக்குள் போகும்போதுதான் சுவாசத்தை கவனிக்கின்றனர். சாதாரண நிலையில் அவர்கள் சுவாசத்தைத் தவறவிடுவது ஏனென்றால், அவர்களுக்குத் தீவிரமான கவனக் குறைபாடு உள்ளது. இப்போதெல்லாம், மக்கள் அவர்களது கவனக் குறைபாட்டை தகுதிக்குரிய ஒரு விஷயம் போல சுமந்திருக்கின்றனர்.
உங்கள் வாழ்க்கைக்குள் கவனம் கொண்டுவருவது உங்கள் வாழ்க்கைக்குள், குறிப்பாக நமது குழந்தைகளின் வாழ்க்கைக்குள் கூர்மையான கவனம் கொண்டு வருவது மிகவும் முக்கியமானது. அது ஆன்மீகமாக இருந்தாலும் அல்லது பொருளியல் தன்மையாக இருந்தாலும், அதற்கு கவனம் செலுத்த நீங்கள் எந்த அளவுக்கு விருப்பமாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்குத்தான் ஒரு விஷயம் உங்களுக்கு பயனளிக்கிறது.
சுவாசத்தின் மீது கவனம் செலுத்துவது, அதற்கு ஒரு முயற்சி. ஆனால் உங்களை உணரச் செய்வதற்கு அதுவும்கூட ஒரு வழிதான். சுவாசத்தின் மீது கவனமாக இருப்பது முக்கியமான விஷயமல்ல. நீங்கள் இயற்கையாகவே உங்கள் சுவாசம் குறித்த உணர்வில் இருக்குமாறு, உங்கள் விழிப்புணர்வின் உச்சத்தை உயர்த்துவது அவசியம். சுவாசமானது அவ்வளவு இயந்திரகதியான ஒரு செயல்பாடு. ஒவ்வொரு கணமும் நீங்கள் காற்றை உள்வாங்கி, வெளிவிடுவதில் உடலானது ஒரு சிறிதளவுக்கு இழுவிசைக்கு ஆட்படுகிறது. உங்களின் மனரீதியான வரையறையில் முற்றிலுமாக நீங்கள் தொலைந்துபோனால் தவிர, சுவாசத்தை எப்படி நீங்கள் தவறவிட முடியும்? உங்களுக்கே உரிய எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளில் நீங்கள் முழுவதுமாகத் தொலைந்து போனாலன்றி, நீங்கள் வெறுமனே அமர்ந்திருந்தால், சுவாசத்தின் செயல்பாட்டை நீங்கள் தவறவிடுவதற்கு வழியே இல்லை. ஏதோ ஒன்றை உங்கள் விழிப்புணர்வுக்குள் இணைத்துக்கொள்வது, ஒரு செயல் அல்ல. இதில் முயற்சி செய்வதற்கு ஏதுமில்லை.
ஒரு குறிப்பிட்ட செயல்முறையை நாம் கற்றுக்கொடுக்கும்போது, சுவாசத்தின் மீது கவனம் செலுத்துமாறு நாம் மக்களிடம் கூறக்கூடும். இது ஏனென்றால், தேவையான அளவு விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை. ஆனால் மற்றபடி, நீங்கள் வெறுமனே உட்கார்ந்தால், உங்கள் மன ஓட்டத்தில் நீங்கள் காணாமல்போனால் தவிர, சுவாசத்தை நீங்கள் உணராதிருப்பதற்கு வழியே இல்லை. ஆகவே, உங்களுடைய எண்ணங்களில் தொலைந்துபோகாதீர்கள் – அதற்கு அதிகமான எந்தப் பலனும் கிடையாது. ஏனெனில் அது மிகவும் வரையறைக்குட்பட்ட சாத்தியங்களின் தகவல்களிலிருந்து வருகிறது. நீங்கள் சுவாசத்துடனேயே கவனம் கொண்டு இருந்தால், அது ஒரு பெரும் சாத்தியத்திற்குப் பாதையாக இருக்கலாம். தற்போது, சுவாசத்தின் செயல்பாடே பெரும்பாலான மக்களின் விழிப்புணர்வில் இல்லாமல் இருக்கலாம். அவர்களது மூக்குத்துவாரங்கள் அல்லது நுரையீரல்களில் காற்று உள்ளே சென்று வெளிவருவதை மட்டும் அவர்கள் உணர்ந்திருக்கலாம்.
நீங்கள் வெறுமனே உட்கார்ந்துகொண்டு அல்லது கீழே படுத்துக்கொண்டு, எல்லா வகையிலும் அசைவற்று இருந்தால், சுவாசம் என்பது அவ்வளவு பெரிய செயல்பாடாக மாறிவிடும். மேலும் இது எல்லா நேரமும் நிகழ்ந்துகொண்டேதான் உள்ளது. இதை கவனிக்காமல், அவர்களது வாழ்வின் ஒவ்வொரு கணமும் இதைப் பற்றிய உணர்வில்லாமல் எப்படி இவ்வளவு மக்களால் வாழ முடிகிறது என்பது ஆச்சரியமானது. சுவாசத்தின் மீது கவனம் செலுத்துவது அதை செயல்படுத்துவதற்கான ஒரு வழியாக இருக்கிறது. சூன்ய தியானத்தில் தீட்சை பெற்றவர்கள் இதை உணரமுடியும் – எதுவும் செய்யாமல் வெறுமனே நீங்கள் அமர்ந்திருந்தால், திடீரென்று சுவாசமானது மிகவும் பிரம்மாண்டமாக நிகழ்ந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆமாம், சுவாசம் நின்றுபோகும் வரையில் நீங்கள் உணராமல் போகலாம் என்றாலும், உண்மையில் சுவாசம் ஒரு மிகப் பெரிய விஷயம்தான்.
நிஷ்ச்சல தத்வம் ஜீவன் முக்தி என்ற பஜகோவிந்தம் உச்சாடனத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். இதன் பொருள் என்னவென்றால், ஏதோ ஒன்றின் மீது தடுமாற்றமில்லாத கவனம் இருந்தால், அது என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, அதன் பிறகு விடுதலைதான், சுதந்திரத்தின் சாத்தியம் உங்களுக்கு மறுக்கப்பட முடியாது. வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமென்றால், கவனக் குறைவுதான் மனிதர்களின் முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. கூர்மையுடன், தீவிரமான கவனமும் இருந்தால், இந்தப் பிரபஞ்சத்தின் எந்தக் கதவையும் உங்களால் திறந்துவிட முடியும். உங்களது கவனம் எவ்வளவு கூர்மையாகவும், தீவிரமாகவும் இருக்கிறது என்பதுடன், உங்களது கவனிப்பின் பின்னணியில் எவ்வளவு சக்தி பொதிந்துள்ளது என்பதையும் சார்ந்திருக்கிறது அது. இதன்படி, நாம் உயிருடன் இருக்கும் காலம் வரை சுவாசம் இடையறாமல் ஓடிக்கொண்டிருக்கும் காரணத்தால், சுவாசம் என்பது ஒரு அழகான சாதனம். எல்லா நேரமும் சுவாசம் இருந்துகொண்டிருக்கிறது. நீங்கள் விழிப்புணர்வுடன் மட்டும் இருக்கவேண்டும்.
மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…
அன்பு ஆனந்தம் ஏன் எட்டாக்கனியாக தெரிகிறது?