மதுப்பழக்கமே இல்லாதவர் மது அருந்தியதாக கூறிய விவகாரம்: போலீஸ் விளக்கம்!

Published On:

| By Jegadeesh

மதுப்பழக்கமே இல்லாத ஒரு நபரை , மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் காட்டியது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போது காவலர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம்.

அந்த வகையில், சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராயப்பேட்டை பகுதிக்கு வேலை தொடர்பாக சென்று விட்டு எல்டாம்ஸ் சாலை வழியாக சாலிகிராமம் நோக்கி தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு பணியில் இருந்த தேனாம்பேட்டை சட்டம்- ஒழுங்கு காவலர் இளங்கோவன் தலைமையிலான காவலர்கள் வாகனத்தை மடக்கி தீபக் மது அருந்தியுள்ளாரா என ’ப்ரீத் அனலைசர்’ இயந்திரத்தைக் கொண்டு சோதனை செய்தனர்.

அப்போது, தீபக் மது அருந்தியிருப்பதாகவும், தீபக்கின் உடலில் 45 சதவிகித, ஆல்கஹால் இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மது அருந்தும் பழக்கமே இல்லாத தீபக் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது, அந்த வீடியோவில், “என்னுடைய பெயர் தீபக். எல்டாம்ஸ் சாலை வழியாக இரவு 10.30 மணியளவில் வீட்டுக்கு செல்லும் வழியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்று போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது 45 சதவீதம் ஆல்கஹால் எனது உடலில் இருப்பதாக அவர்கள் சோதனை செய்த மிஷினில் காட்டியது. ஆனால், சிறுவயதில் இருந்தே எனக்கு குடிக்கிற பழக்கம் கிடையாது.

இது எனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியும். நான் உடனே அரசு மருத்துவமனைக்கு வந்து ரத்தப் பரிசோதனை செய்து தருகிறேன். அதில் குடித்து இருப்பது உறுதியானால் நான் அபராதம் செலுத்துகிறேன் என்று கூறினேன்.

ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து இன்னொரு மிஷின் கொண்டு வந்து சோதனை செய்ததில் குடிக்கவில்லை என்று காட்டியது. அதன் பின்னர் என்னை அங்கிருந்து கிளம்பச் சொன்னார்கள். இது மாதிரி நீங்கள் பாதிக்கப்பட்டால் விழிப்புணர்வோடு இருங்கள்” என்று கூறினார்.

இந்நிலையில், இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் கபில் குமார் சாரட்கர், “இதுவரை இது போன்று நிகழ்வு நடந்ததில்லை. சென்னை காவல்துறையில் 320 ப்ரீத் அனலைசர் இயந்திரங்கள் உள்ளது.

அதில் இது போன்று பிரச்சனைகள் இருந்ததில்லை’ என்று கூறியுள்ளார். அதேநேரம், இது குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

இவர் ஆணா? பெண்ணா?

பாஜகவை அடித்த பாஜக?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel