நாமக்கல் அருகே ஏடிஎம் கொள்ளையர்களை இரண்டு மணி நேரம் சேஸிங் செய்து பிடித்துள்ளனர் தமிழக போலீசார்.
கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து மூன்றுக்கும் மேற்பட்ட ஏடிஎம் மிஷின்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தமிழகத்துக்குள் நுழைவதாக இன்று காலை கேரளா போலீசார் தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கொள்ளைகும்பல் வந்த கண்டெய்னர் லாரி கோவையை கடந்ததும், நாமக்கல் எஸ்.பி.ராஜேஸ் கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக நாமக்கல் மாவட்டத்தில் குறிப்பிட்ட இடங்களில் போலீஸ் ஸ்ட்ரென்த்தை இறக்கினார் எஸ்.பி.ராஜேஸ் கண்ணன்.
இந்நிலையில் கோவையில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை, நாமக்கல் பார்டரில் சரியாக 8.45 மணிக்கு போலீசார் மறித்தனர். ஆனால் லாரியை நிறுத்தாமல் போலீசாரை இடிப்பது போல் மிரட்டி வண்டியை வேகமாக ஓட்டியுள்ளார் டிரைவர்.
விடாமல் போலீசாரும் வண்டியை விரட்டி சென்றனர். நாமக்கல் எஸ்.பி. போலீஸ் ஸ்ட்ரென்த்தை எதிரிலும் வரவழைத்தார்.
ஆனால் கண்டெய்னர் லாரி நிறுத்தாமல் இரண்டு முறை யூடர்ன் அடித்து போலீசாரை அலைய வைத்தனர். இதுபோல் சுமார் 15 கிமீ தூரத்தை 8.45 முதல் 10.45 வரை சுமார் இரண்டு மணி நேரம் சுற்றி சுற்றி வந்த லாரியை போலீசார் சேஸிங் செய்தனர்.
இதை அந்த சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிரட்சியோடு பார்த்தனர்.
அப்போது வண்டியை சேஸிங் செய்த போலீசார் மேல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, “கண்டெய்னர் லாரியை நிறுத்த முடியவில்லை. தடுக்க முயன்ற வாகனத்தையும் இடித்துவிட்டு செல்கிறார்கள். இதுவரை 5க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்துள்ளனர்” என்றனர். இதையறிந்த மேல் அதிகாரிகள், துப்பாக்கியால் சுட்டு பிடிக்க உத்தரவிட்டனர்.
அதன்படி, குமாரப்பாளையம் – சங்ககிரி சாலையில் பச்சாம்பாளையம் அருகில் சென்று கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு நடத்தி போலீசார் லாரியை நிறுத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் லாரியில் இருந்த ஜுமைதீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அசிருதின் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லாரியில் இருந்த மற்ற 5 பேரை போலீசார் விசாரணை வளையத்துக்குள் வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, கடந்த ஒரு மாதத்தில் தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட ஏடிஎம் மிஷின்களை உடைத்து கொள்ளை அடித்திருப்பதும். இப்போது கேரளாவில் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் அவர்களிடம், ’எப்படி கொள்ளை திட்டம் போடுவீர்கள்.. கொள்ளையடிக்க எந்த வாகனத்தில் செல்வீர்கள்?’ என்று கேட்டபோது,
ஒரு மாவட்டத்தில் கொள்ளை அடித்தால், அந்த மாவட்டத்தை சுற்றி உள்ள போலீசார் அலெர்ட் ஆகிவிடுவார்கள். அதனால் 5 அல்லது 10 மாவட்டங்கள் தள்ளி, 5 நாள் இடைவெளியில் மற்றொரு மாவட்டத்தில் ஏடிஎம்-ஐ உடைத்து பணத்தை எடுப்போம்.
ஏடிஎம் மிஷினில் கொள்ளையடிப்பதற்கு முன்பு நாங்கள் வைத்துள்ள ஹூண்டாய் கிரெட்டா காரில் சென்று ஏடிஎம்களில் பணம் எடுப்பது போல், அந்த பகுதியை சுற்றி நோட்டமிட்டு வருவோம்.
எந்தெந்த ஏடிஎம்-ல் பணத்தை நிரப்பி இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு அங்கு செல்வோம். அப்போது டிரைவரை காரிலேயே இருக்க சொல்லிவிட்டு ஒருவர் 50 அடி தூரத்தில் நின்று யாராவது வருகிறார்களா என்று கண்காணிக்க அனுப்பிவிடுவோம்.
மூன்று பேர் மிஷினை உடைத்து பணத்தை எடுப்பார்கள். உடனே அனைவரும் அங்கிருந்து காரில் தப்பித்து விடுவோம்.
கண்டெய்னர் லாரி இருக்கும் இடத்திற்கு சென்று அதில் பணத்தை வைத்துவிட்டு, காரின் நம்பர் ப்ளேட்டை (பதிவெண்) மாற்றிவிடுவோம்.
இதேபோல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநில பதிவெண்களில் பல சீரியல்களில் நம்பர்களை வைத்திருப்போம். 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை கொள்ளையடித்ததும் கண்டெய்னர் லாரியில் காரை ஏற்றிவிட்டு சந்தேகம் வராதபடி வேறு இடத்துக்கு புறப்பட்டு விடுவோம். அப்போது டிரைவர் கேபினில் இரண்டு பேரை தவிர மற்றவர்கள் கண்டெய்னருக்குள் இருப்போம்.
இதுவரை பல மாநிலங்களில் கொள்ளையடித்திருக்கிறோம். எங்களை யாரும் பிடிக்கவில்லை. ஆனால் கேரளாவில் கொள்ளையடித்து வரும் போது நீங்கள் (தமிழக போலீசார்) பிடித்துவிட்டீர்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் நீங்கள் செல்போன் அதிகமாக பயன்படுத்தமாட்டீர்களா என்ற கேள்விக்கு,
நாங்கள் பெரும்பாலும் சம்பவத்துக்கு முன்னரும், பின்னரும் செல்போன் பயன்படுத்தமாட்டோம். ஏரியாவை தாண்டியதும் தேவைப்பட்டால் மட்டுமே செல்போனை பயன்படுத்துவோம் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் சுமார் 25 இடங்களில் 5 கோடி ரூபாய் வரை இவர்கள் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது என்கிறார்கள் போலீசார் தரப்பில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?: சேலம் சரக டிஐஜி உமா விளக்கம்!
உத்தரபிரதேசத்துல வாழ்றது கஷ்டம்னு கேள்விபட்டுருக்கோம், ஆனா, இந்த அளவுக்கா?