Botanical Garden in chengalpattu district

செங்கல்பட்டில் தாவரவியல் பூங்கா: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகம்

தமிழ்நாடு அரசு ரூபாய் 300 கோடி செலவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாவரவியல் பூங்காவினை அமைக்க உள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”செங்கல்பட்டு மாவட்டம், கடம்பூர் கிராமத்தில் 137.65.0 ஹெக்டேர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்காகத் தமிழ்நாடு அரசு 28 டிசம்பர் 2022 புதன்கிழமை அன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், இத்திட்டம் 5 ஆண்டுகளில் (2022-2027) செயல்படுத்தப்படும் என்று அரசாணையில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், ஆயத்த கட்டம், செயல்படுத்தும் கட்டம் மற்றும் இறுதிக் கட்டம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

இந்தத் திட்டமானது, பூர்வீக இனங்களின் தோட்டம், ஆர்போரேடம்ஸ் (Arboretums) மற்றும் பேம்புசிடம்ஸ் (Bambusetums), மரக்கன்றுகள் மற்றும் ஹீலிங் கார்டன், மூலிகைத் தோட்டம், ரோஜா தோட்டம், ராக்கரி, ஜப்பானிய தோட்டம், பண்டைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பு போன்ற கூறுகளும் இத்திட்டத்தில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தில், வழிகாட்டப்பட்ட நடைப்பயிற்சி, இயற்கைக்கான குழந்தைகள் – தாவர உயிரியல் பன்முகத்தன்மை பற்றி மாணவர்களுக்குத் தெரிவிக்கும் கல்வித் திட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கான பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள், நடைப்பயிற்சி, படகு சவாரி, இயற்கை பாதைகள், சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் பிற ஆரோக்கிய நடவடிக்கைகள் உள்ளிட்ட செயல்பாடுகளையும் கொண்டிருக்கும்.

Botanical Garden in chengalpattu district

அம்மண்ணிற்குரிய உணவு வகைகள் மற்றும் கைத்தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரம், விவசாயிகள் மற்றும் தொழில்கள் மேம்படும்.

இந்த திட்டத்தை ஒருங்கிணைத்தல், சர்வே, எல்லைகள் அமைத்தல், வேலி அமைத்தல், நில மேம்பாடு போன்ற பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள, சிறப்புப் பணி அலுவலர் ஒருவர் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அரிய, அழிந்துவரும் தாவர இனங்கள் உட்பட தமிழ்நாட்டின் பூர்வீக தாவர வகைகளைப் பாதுகாத்து, தாவரவியல் பூங்கா பொழுதுபோக்கு மையமாகவும் மற்றும் சூழல்-சுற்றுலா மையமாகவும் உருவாக்கப்படும்.

இத்தாவரவியல் பூங்கா இங்கிலாந்தின் கியூவில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து அமைக்கப்படும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) தனியாகக் கையெழுத்திடப்படும். இத்திட்டத்தின் முதல் கட்ட பணிகளில், வேறுபட்ட உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு (DGPS), கணக்கெடுப்பு போன்றவைகளும் அமைந்திருக்கும்.

மண், நீர் மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீடு, திட்டப் பகுதியைச் சுற்றி வேலி அமைத்தல், போன்றவற்றிற்கு விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பதற்காகத் தமிழ்நாடு அரசு ரூபாய் 1.00 கோடி விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிஷா

பயிர் சேதம்: நிவாரணம் அறிவித்த தமிழக அரசு!

’செம்பி’ பட வசனம்: மீடியாவிடம் சிக்கிய பிரபு சாலமன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *