“மழையால் சேதமடைந்த புத்தகங்கள்” : எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உருக்கம்!

தமிழகம்

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை இழந்துவிட்டதாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வாகனங்கள் தொடங்கி புத்தகங்கள் வரை ஏராளமான பொருட்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அதன் உரிமையாளர்கள் கவலையில் இருக்கின்றனர்.

இந்நிலையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய பதிப்பகத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை இழந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இவர் தேசாந்திரி எனும் பதிப்பகத்தை நடத்தி வருகிறார். மழை வெள்ளம் இந்த பதிப்பக குடோனுக்குள்ளும் புகுந்துள்ளது. இதனால் புத்தகங்கள்  நனைந்து சேதமடைந்துள்ளன.

May be an image of book and text

இதுகுறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் டிசம்பர் 5ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நேற்று ஏற்பட்ட கடும் புயல்மழையால் எங்கள் பதிப்பகத்தின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காலை ஐந்து மணி முதல் புத்தகங்களை வேறுஇடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். கடும் மழையின் காரணமாக வாகனம் எதுவும் கிடைக்கவில்லை. தண்ணீர் சரசரவென உயர்ந்து கொண்டே போனது. புத்தகங்களை இடம் மாற்ற இயலவில்லை. ஏராளமான புத்தகங்கள் நனைந்து வீணாகிப்போகின.

May be an image of studying, book, diary and text

கண்ணீரோடு அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்களுக்கு பெரியது. இருபது லட்ச ரூபாயிற்கும் மேலான புத்தகங்கள் சேதமாகியிருக்க கூடும். மீதமுள்ள புத்தகங்களைக் காப்பாற்றி கொண்டு வந்து வீடு முழுவதும் நிரப்பியிருக்கிறோம்.

நேற்று முழுவதும் வீட்டிற்குள்ளும் தண்ணீர் வரும் நிலை. இரண்டு படிகள் தண்ணீரில் முழ்கிவிட்டன. மின்சாரமில்லை. இணைய தொடர்பில்லை. எவரையும் உதவி கேட்டு தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆயினும் அருகிலுள்ள நண்பர்கள் ஒடியோடி வந்து புத்தகங்களைக் காப்பாற்ற உறுதுணை செய்தார்கள்.

May be an image of book and text

மழை நின்ற இன்றும் மின்சாரமில்லை. வீட்டைச்சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கண்முன்னே புத்தகங்களை இழப்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இத்தனை ஆண்டுகாலம் எழுதிச் சம்பாதித்த பணத்தைக் கொண்டும் வங்கி கடன் உதவியாலும் தான் தேசாந்திரி பதிப்பகம் துவங்கினோம். உங்கள் ஆதரவால் வெற்றிகரமாகவே நடத்தினோம். ஆனால் நேற்றைய மழை எங்களை வேரோடு சாய்த்து விட்டது.
புத்தகக் குடோனுக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தோம். ஆனால் இயற்கை பேரிடர்களுக்கு இன்சூரன்ஸ் கிடையாது என்று கைவிரித்துவிட்டார்கள். இப்போது என்ன செய்வது என்று தெரியாத நிலை.

நெருக்கடியான சூழலில் ஈரமான புத்தகங்களுக்கு நடுவே கண் கலங்கி அமர்ந்திருக்கிறேன். எனக்கு தெரிந்த உலகம் புத்தகங்களும் வாசகர்களும் மட்டும் தான். அவர்கள் மீண்டும் என்னை மீட்பார்கள் என்ற நம்பிக்கையோடு” என குறிப்பிட்டுள்ளார்.

No photo description available.

அந்த பதிவில் நனைந்த புத்தகங்களையும், தண்ணீர் தேங்கி நிற்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த் உருக்கமான பதிவைத் தொடர்ந்து பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா
மழை பாதிப்பு: மின் கட்டணம் செலுத்த அவகாசம்!

திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

“தலைகுனிவு” : மழை பாதிப்பு பற்றி அண்ணாமலை பேட்டி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *