திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு இரண்டாவது நாளாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் மாணவர்களுக்கு இன்றும் (செப்டம்பர் 14) விடுமுறை அறிவிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பஞ்செட்டியில் வேலம்மாள் மெட்ரிக் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 13) காலை உதவி தலைமை ஆசிரியருக்கு, பள்ளியின் உள்ளே வெடிகுண்டு இருப்பதாகக் குறுஞ்செய்தி வந்தது.
இதனால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாணவர்களின் பெற்றோர்களுக்குக் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டு பள்ளிக்கு வந்த மாணவர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதுகுறித்துக் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் வந்து சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் சோதனையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனால் பள்ளி வளாகம் சற்று இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால் இரண்டாவது முறையாக நேற்று இரவு உதவி தலைமை ஆசிரியருக்குக் குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.
இதனால் இன்றும் (செப்டம்பர் 14) பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், குறுஞ்செய்தி அனுப்பியது யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோனிஷா
மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வேண்டுமா? இதைச் செய்யுங்க!