போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊர் எடுத்துச் செல்லப்படும் ஸ்ரீமதி உடல்!

தமிழகம்

கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரில் இன்று (ஜூலை 23 ) நடைபெற உள்ள நிலையில் , உள்ளூர் மக்கள் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர், உறவினர்கள், மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கடந்த ஜூலை 17ஆம் தேதி வன்முறையில் முடிந்தது.

இந்நிலையில் மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கில் நேற்று மகளின் உடலை பெற்றுக்கொள்ளுங்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் உடலை பெற்றுக்கொள்வதாக பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

அதன்படி, பள்ளி மாணவியின் உடல் இன்று ( ஜூலை 23 ) அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவி உயிரிழந்து 10 நாட்களுக்கு பிறகு இன்று உடல் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து உடல் போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. செல்லும் வழிகளில் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவியின் சொந்த ஊரில் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இன்று நடைபெற உள்ள இறுதி சடங்கில் வெளியூர் ஆட்கள் பங்கேற்க கூடாது என பெரியநெசலூரில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
2