12 ஆண்டுகளுக்குப் பிறகு போடியில் இருந்து மதுரை, சென்னைக்கு ரயில்கள் இயக்கம்!

தமிழகம்

12 ஆண்டுகளுக்குப் பிறகு போடியில் இருந்து மதுரை மற்றும் சென்னை ஆகிய ஊர்களுக்குச் செல்ல வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் இரண்டு ரயில்கள் நீட்டித்து இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை – போடி இடையிலான 90.4 கிலோ மீட்டர் தூர மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி 2011இல் காங்கிரஸ் ஆட்சியின்போது தொடங்கியது.

நிதியின்றி கிடப்பில் போடப்பட்ட பணிகள் தேனி மக்களின் தொடர் போராட்டம் காரணமாக 2017இல் பாஜக அரசால் மீண்டும் கையில் எடுக்கப்பட்டது.

மதுரை – போடி ரயில் திட்டத்துக்கு 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்தினர்.  

மதுரை – உசிலம்பட்டி, உசிலம்பட்டி – ஆண்டிபட்டி, ஆண்டிபட்டி – தேனி என ஒவ்வொரு கட்டமாக பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.

இறுதியாக மதுரை – தேனி இடையே 75 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணி முடிந்து கடந்த மே 26ஆம் தேதி முதல் மதுரை – தேனி இடையே தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மதுரை – போடி இடையே 90 கிமீ தொலைவிலான அகலப் பாதையில் தற்போது தேனி வரை பணிகள் முடிவடைந்து சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேனி-போடி இடையேயான 15 கிமீ பணிகள் முடிந்து கடந்த மாதம் 29ஆம் தேதி அதிவேக சோதனை ரயில் ஓட்டமும் நடைபெற்றது.

இதில் பாதுகாப்பு அம்சங்கள் திருப்திகரமாக உள்ளதாக ஆய்வுக்குழு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து இருமார்க்கமாக மதுரையில் இருந்து தேனி வரை இயங்கும் சிறப்பு ரயிலையும் (06701,06702), சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரை வரை இயங்கும் அதிவேக விரைவு ரயிலையும் (20601,20602) பிப்ரவரி 19ஆம் தேதி முதல் போடி வரை நீட்டித்து இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.

ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்குப் பிறகு போடிக்கு ரயில் சேவை கிடைத்துள்ளதுடன், சென்னைக்கு நேரடி ரயிலும் இயக்கப்பட உள்ளதால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

-ராஜ்

நண்பகல் நேரத்து மயக்கம் தமிழ் படமா?

கிச்சன் கீர்த்தனா : பேபி பீட்சா தோசை

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *