மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைக்க கோரி அனைத்து வகை தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
மேலும் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த மாதம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமும் நடந்தது.
இந்த நிலையில் மின் கட்டணத்தை குறைக்கக் கோரி தொழிற்சாலைகளில் கறுப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை தமிழ்நாடு தொழில்முறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர்.
இதன்பேரில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு, மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், ஈரோடு மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கறுப்புக்கொடி ஏற்றியுள்ளனர்.
மேலும், தொழிற்சாலைகளுக்கு உயர்த்திய 430 சதவிகித நிலைக் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பரபரப்பு நேர (பீக் அவர்ஸ்) கட்டணம் திரும்பப் பெற வேண்டும்.
சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும். ‘மல்டி இயர் டேரிப்’பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிடம் நிர்வாகிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாக சென்று மனு வழங்கினர்.
இதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளிலும் கறுப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடந்தது.
கோவை இடையர்பாளையம், கணபதிகுறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 50,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்திலும் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது.
மேலும் கோவை மாவட்ட தொழில் முனைவோர்கள் அனைவரும் கறுப்புச் சட்டை அணிந்தபடி ஊர்வலமாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் அங்கு கலெக்டரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். ஈரோடு, கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களிலும் நேற்று கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு போராட்டம் நடந்தது.
இந்தப் போராட்டம் குறித்து பேசியுள்ள ஒருங்கிணைப்பாளர்கள், “மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக தொழில்துறையினர் கறுப்பு பேட்ஜ் அணிந்து அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு நீதி நாள் முகாமில் கலெக்டரை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக வருகிற 16ஆம் தேதி தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். இதில் திரளானவர்கள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கேட்குதா… கேட்குதா? அப்டேட் குமாரு
ODI Worldcup 2023: சுப்மன் கில் விளையாடுவாரா? பிசிசிஐ முக்கிய அறிவிப்பு