பிளாக் காபி குடிப்பது எடையைக் குறைக்க உதவும் என்பது உண்மையா? பால் கலக்காத பிளாக் காபி குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானதா? பால் சேர்த்த காபிக்கு பதில் அதை எடுத்துக் கொள்ளலாமா? எந்த வேளையில் பிளாக் காபி குடிப்பது சிறந்தது? – இப்படி பல சந்தேகங்கள்… இதற்கு தீர்வு என்ன?
டிகாக்ஷனில் பால் சேர்த்து அருந்துவதை காபி என்கிறோம். பிளாக் காபியில் பால் சேர்க்கப்படுவதில்லை அவ்வளவுதான்.
நம் முன்னோர் சாப்பிட்ட கறுப்பு காபிதான் இன்று நாகரிக அடையாளமாக பிளாக் காபி என்று அழைக்கப்படுகிறது. இந்த பிளாக் காபியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மிக அதிகம்.
கஃபைன் தவிர, அதில் வைட்டமின் பி2 மற்றும் மக்னீசியம் சத்தும் அதிகம் உள்ளது. செல்களில் ஏற்படும் சிதைவுக்கு எதிராகப் போராடி, சில வகை உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் ஆபத்தையும் குறைப்பதாக, நிரூபிக்கப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எடைக்குறைப்பு முயற்சியில் இருப்பவர்களுக்கு இந்த பிளாக் காபி பெருமளவில் கைகொடுக்கும். அதாவது, வொர்க் அவுட் செய்வதற்கு முன் பிளாக் காபி குடிப்பது, கலோரிகளை எரிக்க உதவும்.
எனவே, எடைக்குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள், வொர்க் அவுட் செய்வதற்கு முன் சிறிதளவு பிளாக் காபி அருந்துவது, விரைவான பலனைக் காண உதவும். காபியில் உள்ள கஃபைன், வளர்சிதை மாற்ற வேகத்தை 3 முதல் 11 சதவிகிதம் வரை அதிகரிக்கும். வளர்சிதை மாற்றம் அதிகரித்தால், உடலின் கொழுப்பு கரையும் வேகமும் கூடும்.
பசியைக் கட்டுப்படுத்துவதிலும் கஃபைனுக்கு பெரும்பங்கு உண்டு. அதனால் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பவர்கள், இடையில் பிளாக் காபி மட்டும் அருந்தலாம். மேலும் பிளாக் காபி, பசி உணர்வைக் கட்டுப்படுத்தி, சரியான அளவு உணவை உண்ண உதவுகிறது.
காபியின் சுவையும் பிரமாதமாக இருக்கும் என்பதால், அதைக் குடித்த உடன், மனநிலையில் ஒருவர் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.
இத்தனை நல்ல விஷயங்களைக் கொண்டது பிளாக் காபி. ஆனாலும், அதன் சுவைக்கு அடிமையாகிவிடாமல், அளவோடு எடுத்துக்கொள்வது அவசியம்” என்கிறார்கள் ஃபிட்னெஸ் பயிற்சியாளர்கள்.