ஊடக கண்காணிப்பு குழுவின் அனுமதி எண் இல்லாமல் விளம்பரம் வெளியிட்டது தொடர்பாக பாஜகவிற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று (ஏப்ரல் 17) தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக, தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சி நிர்வாகிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு, “ஊடக கண்காணிப்பு குழுவின் உரிய அனுமதி எண் இல்லாமல் விளம்பரம் வெளியிட்டது தொடர்பாக பாஜகவிற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும்.
பூந்தமல்லியில் பிடிபட்ட 1,425 கிலோ தங்கம், சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக வருமான வரித்துறையிடம் இருந்து முழுமையான அறிக்கை பெறப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் 162 கோடியே 47 லட்சம் ரூபாய் வரை ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
முன்னதாக , தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த பின்னர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்திருந்தார்.
அதில் , “இன்று (ஏப்ரல் 17) மாலை 6.00 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ் விதிமுறைகள் அமலில் இருக்கும்.
தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, ரேடியோ, வாட்ஸ்ஆப், முகநூல், டிவிட்டர் போன்றவை வாயிலாகப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது.
இந்த விதிமுறைகள் மீறப்பட்டால் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2) ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘மிஸ்டர் மனைவி’ சீரியலின் புது ஹீரோயின் இவர்தான்… ஷபானாவுக்கு டஃப் குடுப்பாரா?