பிரியாணி சண்டை : கணவரும் உயிரிழப்பு!

தமிழகம்

சென்னையில் பிரியாணி கேட்ட மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த கணவரும் இன்று (நவம்பர் 9) உயிரிழந்துள்ளார்.

அயனாவரம் தாகூர் நகர் மூன்றாவது தெருவில் வசித்து வந்தவர்கள் கருணாகரன்(75) – பத்மாவதி (65) தம்பதியினர். ரயில்வேயில் உள்ள ஐ.சி.எப்-ல் கார்பெண்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற கருணாகரன் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார்.

இவர்களுக்கு மகேஸ்வரி(50), குமார்(46), ஷகிலா(44), கார்த்திக் (40) என நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

அடிக்கடி தனது மகள் மற்றும் மகன் வீட்டிற்கு செல்லும் கருணாகரன் பத்மாவதி தம்பதியினர் சிறிது நாட்கள் அங்கு தங்கி விட்டு மீண்டும் அயனாவரத்தில் உள்ள தங்களது வீட்டிற்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

இவர்கள் இருவரும் வயது முதிர்வு மற்றும் தனிமையின் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டு சில மாதங்கள் மருத்துவ சிகிச்சையும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 7 ஆம் தேதி இரவு கருணாகரன் வீட்டிற்குப் பிரியாணி வாங்கி வந்து தனியாக சாப்பிட்டுள்ளார். அப்போது மனைவி பத்மாவதி தனக்கும் பிரியாணி வேண்டும் என்று கேட்டதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த கருணாகரன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து பத்மாவதி மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் பத்மாவதி அலறியடித்துக் கொண்டே கணவர் கருணாகரனை கட்டிப்பிடித்ததில் கருணாகரன் உடலிலும் தீப்பற்றி எரிந்துள்ளது.

இவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று தீயை அணைத்துள்ளனர். மேலும் அயனாவரம் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து தகவலும் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

கணவர் மட்டும் தனியாக பிரியாணி வாங்கி சாப்பிட்டதாகவும் தனக்கும் பிரியாணி வாங்கி தரக் கேட்டபோது பிரச்சனை ஏற்பட்டு, தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டதாகவும் பத்மாவதி வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

பின்னர் பத்மாவதி சிகிச்சை பலனின்றி நேற்று (நவம்பர் 8) உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

50 சதவீத தீக்காயங்களுடன் கருணாகரன் ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (நவம்பர் 9) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரியாணிக்காகத் தம்பதி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மோனிஷா

‘சுவாரஸ்யமான காலை’ : மீனவர்களுடன் சச்சின்

T20 WorldCup 2022: முதல் அரையிறுதியில் முத்திரை பதிக்க போவது யார்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *