மிக்ஜாம் வெள்ளத்தின்போது ஏற்பட்ட எண்ணூர் எண்ணெய் கழிவு பாதிப்புகள் முகத்துவாரப் பகுதியில் வசித்து வந்த பறவைகளையும் முடக்கிப்போட்டுள்ளது. எண்ணெய் கழிவில் மூழ்கி 50-க்கும் மேற்பட்ட பறவைகள் உயிருக்கு போராடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. Birds fighting for survival
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகள் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளன.
குறிப்பாக எண்ணூர் முகத்துவாரப் பகுதிகளில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எண்ணெய் கழிவுகள் தேங்கி மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக முடக்கிப்போட்டுள்ளன.
கடந்த 10-ம் தேதி முதல் எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதிகளில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்தப் பணிகள் முடிவுக்கு வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இப்படி எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டிருப்பதாக சுற்றுச்சூழல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தப் பகுதி மீனவர்கள் தாங்கள் பயன்படுத்தும் முகத்துவாரப் பகுதிகளில் தேங்கி காணப்படும் எண்ணெய் கழிவுகளை தொடர்ந்து தாங்களாகவே அகற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள் மற்றும் பறவையினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வனத்துறையினரும், பறவைகள் நல ஆர்வலர்களும் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த ஆய்வின் போது அவர்கள் கண்ட காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. வெண்மையாக காட்சியளிக்கும் பெலிக்கான் பறவைகள் உள்பட பல்வேறு பறவை இனங்கள் தங்களது தோற்றத்தை இழந்து எண்ணெய் தோய்ந்த உடலுடன் பொலிவிழந்து காணப்பட்டன.
இதே போன்று 50-க்கும் மேற்பட்ட பறவைகளை வனத்துறையினரும், சுற்றுச்சூழல் துறையினரும் கண்டறிந்து உள்ளனர்.
பறவைகளின் உடலில் ஒட்டியுள்ள எண்ணெய் கழிவுகள் இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டதால் உடலோடு உடலாக ஒட்டி காணப்படுகிறது.
இப்படி எண்ணெய் பிசுபிசுப்புடன் கருமை நிறத்தில் காணப்படும் பறவைகளால் உயரமாக பறக்க முடிவதில்லை. தாழ்வாகவே பறந்து செல்கின்றன.
எண்ணூர் முகத்துவார பகுதியில் தேங்கிய எண்ணெய் கழிவுகளால் ஏராளமான கடல்வாழ் உயிரினங்களும் செத்து மடிந்தன.
இப்படி விஷமாகிப் போன மீன்களை ஏதும் அறியாத பறவை இனங்கள் சாப்பிட்டுள்ளன.
பின்னர் அந்த மீன் உணவுகள் ஒத்துப்போகாமல் பறவைகள் வாந்தியும் எடுத்துள்ளன. இந்தக் காட்சிகளையும் வனத்துறையினர் நேரில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எண்ணெய் கழிவுகளால் உடலில் ஏற்பட்ட பாதிப்பு, விஷமாகிப் போன மீன்களால் உடல்நிலை பாதிப்பு என பறவை இனங்கள் உயிருக்கு போராடும் நிலையில் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சோள ரவை – உப்புமா கொழுக்கட்டை
சென்னை அணியில் ரோகித் சர்மா? காசி விஸ்வநாதன் சொல்வது என்ன?
Birds fighting for survival