பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது, மனித குலத்திற்கும், பெண் இனத்திற்கும் அவமானம் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின் போது 21 வயதான பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 11 குற்றவாளிகளுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2002, ஜனவரி 21-ம் தேதி ஆயுள் தண்டனை விதித்தது.
இவர்கள் கோத்ரா கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 15 ஆண்டுகள் இவர்கள் சிறைவாசம் அனுபவித்ததால், தண்டனை குறைப்பு கொள்கையின்படி, குற்றவாளிகள் 11 பேரும் கோத்ரா சிறையில் இருந்து கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் மற்றும் வழக்கறிஞர் அபர்ணா பட் ஆகியோர் நேற்று ஆகஸ்ட் 23 உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து கொள்வதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
பில்கிஸ் பானு வழக்கு குறித்து பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு, வாழ்க்கையை பார்த்து பயப்படக்கூடிய பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும்.
குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட எந்த ஒரு மனிதனும் விடுதலையாகக் கூடாது. குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டால், மனித குலத்திற்கும் பெண் இனத்திற்கும் அவமானமாகும்.
பில்கிஸ் பானுவோ அல்லது எந்த ஒரு பெண்ணோ அவர்கள் பாதிக்கப்படும் போது அரசியல், கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு நமது ஆதரவை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
செல்வம்