ஹெல்மெட் போடாமல் பைக் ரெய்டு: பிரஷாந்துக்கு அபராதம் விதித்த போலீஸ்!

சினிமா தமிழகம்

பட புரோமோஷனுக்காக ஹெல்மெட் போடாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டியவாறு பேட்டிக்கொடுத்த நடிகர் பிரஷாந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

90களின் சாக்லெட் பாயாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் பிரஷாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படத்தில் நடிகைகள் தபு, சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் என பலர் நடித்துள்ளனர்.

இன்னும் ஒரு வாரத்தில் படம் ரிலீசாக உள்ள நிலையில் புரமோஷன் வேலைகளில் படு பிஸியாக உள்ளார் பிரஷாந்த்.

இந்தநிலையில் அவர் கலாட்டா மீடியாவுக்கு பைக்கை ஓட்டியவாறே பேட்டி அளித்தார்.

அதில்,  “நான் பைக் ஓட்ட ஆசைப்பட்டேன் என்பதற்காக என் அப்பா சிறு வயதில் ஆர்எக்ஸ் 100 பைக் வாங்கிக் கொடுத்தார். நான் பைக்கிலிருந்து கீழே விழுந்து, கியரையெல்லாம் உடைத்து எப்படியோ மூன்று நாட்களில் பைக்கை ஓட்ட கற்றுக்கொண்டேன்.

இதை அப்பாவிடம் சொன்னவுடன் 4ஆவது நாளில் பைக்கை விற்றுவிட்டார்” என்று முதன்முதலில் பைக் ஓட்டிய அனுபவங்கள் பற்றி கூறியிருந்தார் பிரஷாந்த்.

இப்படி பேட்டி கொடுத்துக்கொண்டே பிரஷாந்த் பைக் ஓட்டும் போது ஹெல்மெட் அணியவில்லை. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள சென்னை காவல்துறை, ”விதிமீறல் காரணமாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஹெல்மெட் அணியாததால் பிரஷாந்த் மற்றும் நேர்காணலை தொகுத்து வழங்கியவருக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் மதுரை அவனியாபுரத்தில் அந்தகன் படத்தை முன்னிட்டு பிரஷாந்த் ரசிகர் மன்றம் சார்பில் போக்குவரத்து விதிகளை பின்பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், 50 பேருக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரஷாந்த், “தற்போது விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்கு அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.

வண்டியை அனைவரும் நிதானமாக ஓட்டுங்கள், கட்டாயமாக தலைக்கவசம் அணியுங்கள். இந்த செய்தியை என் ரசிகர்கள் மூலம் பொது மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். தலைக்கவசம் உயிர்க்கவசம் என்று கூறுவதை விட, அது அனைவரின் குடும்பத்திற்கே கவசம்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

பிரியா

நேரடி லஞ்சக் கொள்முதல் நிலையம்… தவிக்கும் விவசாயிகள்!

வயநாடு நிலச்சரிவு… “தந்தையை இழந்த துக்கத்தை தற்போது உணர்கிறேன்” – ராகுல் எமோஷனல்!

ராகுலின் சாதியை இழுத்த பாஜக எம்.பி…டிசைன் டிசைனாய் சர்ச்சைகள்…யார் இந்த அனுராக் தாக்கூர்?

+1
0
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *