தமிழ்நாட்டில் பணிபுரியும் புலம்பெயர் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பீகாரில் இருந்து வந்த ஆய்வு குழுவினர் இன்று (மார்ச் 4) பேட்டி அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த வடஇந்தியத் தொழிலாளர்கள் பல்வேறு துறைகளில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்படுவதாக கடந்த 2 நாட்களாக சமூகவலைத்தளங்களில் பல வீடியோக்கள் பகிரப்பட்டன.
எனினும் பரவிய வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தும் போலியானைவை மற்றும் பழையவை என்று விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறை சார்பில். ”வடமாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் வதந்திகளை பரப்பிய முக்கிய குற்றவாளிகளான உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாரா, தன்வீர் உள்ளிட்ட நால்வரை பிடிக்க தமிழ்நாடு தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர்.
இதற்கிடையே வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகப் பரவிய வதந்தி குறித்து ஆய்வு செய்வதற்காக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் அடங்கிய அதிகாரிகள் குழு இன்று சென்னை வந்தது.
அவர்கள் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பீகார் அதிகாரிகள் குழு சார்பாக பாலமுருகன் ஐஏஎஸ் பேசுகையில், ”பீகாரிலிருந்து வந்து தமிழ்நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் பேசினோம். அவர்கள் எந்த பிரச்சனையும் இன்றி இங்கு இருப்பதாகத் தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்களில் பரவும் போலி வீடியோக்களை நம்பி ஏமாற வேண்டாம். தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்கு அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
நாளை திருப்பூர், கோவைக்கு சென்று புலம்பெயர் தொழிலாளர்களை சந்திக்க உள்ளோம் தேவைப்பட்டால் வேறு சில இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்துவோம்.” எனத் தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா