கல்வீச்சு – கண்ணீர் புகை – தடியடி : கலவர பூமியாய் மாறிய எருதுவிடும் விழா!

தமிழகம்

சூளகிரி அருகே எருதுவிடும் விழா நடத்த அனுமதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கல்வீச்சு தாக்குதல் போன்றவையால் கலவரமாக மாறியது.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும் தடியடி நடத்தியும் கலைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்.

அதேபோல் தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை எருதுவிடும் விழா நடத்தப்படுவது வழக்கம்.

பள்ளி மாணவன் உட்பட 3 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கலை முன்னிட்டு கடந்த மாதம் பல்வேறு பகுதிகளில் எருதுவிடும் விழாக்கள் நடைபெற்றன. ஆனால் போதிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படாததால் காளைகள் முட்டி தாக்கியதில் பள்ளி மாணவன் உட்பட 3 பேர் பலியாகினர்.

இதனால் எருதுவிடும் விழாவிற்கு அனுமதி வழங்குவதில், மாவட்ட நிர்வாகம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

போலீஸ், தீயணைப்புத்துறை, கால்நடை பராமரிப்பு, வருவாய்த்துறை என, ஒன்பது அரசு துறைகளில் அனுமதி பெற்றால் மட்டுமே, மாவட்ட நிர்வாகம் போட்டி நடத்த அனுமதியளிக்கப்படும் என்று மாவட்ட ஆணையில் வெளியிடப்பட்டது.

அதன்படி நடைமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் கடந்த வாரம், கிருஷ்ணகிரியில் உள்ள இரண்டு கிராமங்களில், எருது விடும் நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

குவிந்த காளைகள், காளையர்கள்

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருதுவிடும் விழாவை நடத்த கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் நேற்று அனுமதி கோரி இருந்தனர். ஆனால், முறையாக அனுமதி பெறாததால் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

எனினும் எருதுவிடும் விழாவில் பங்கேற்கவும், பார்க்கவும், ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் இன்று அதிகாலை முதலே கோபசந்திரம் கிராமத்தில் திரண்டனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் விழாவிற்கு அனுமதி வழங்காததால், திட்டமிட்டபடி நிகழ்ச்சி தொடங்கவில்லை.

கல்வீச்சு தாக்குதல் நடத்திய இளைஞர்கள்

இதனால் அதிர்ச்சியடைந்த 700க்கும் மேற்பட்ட இளைஞர்களும், பொதுமக்களும், காலை 7 மணியளவில் கோபசந்திரத்தில் உள்ள கிருஷ்ணகிரி – பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் லாரிகளை குறுக்கே நிறுத்தியும், கற்களை கொட்டியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே போராட்டக்காரர்களுடன் சூளகிரி வட்டாட்சியர் அனிதா மற்றும் போலீஸார் நடத்திய சமாதான பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் வலியுறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் போலீஸார் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர்.

சாதாரணமாக தொடங்கிய இந்த போராட்டம் சிறிது நேரத்தில் பெரும் கலவரமாக வெடித்தது. அங்கு நின்றிருந்த போலீஸார் மட்டுமின்றி அவ்வழியாக வந்த 3 அரசு பேருந்துகள் மற்றும் இரண்டு ஜீப் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்தனர்.

தடியடி நடத்தி போராட்டம் கலைப்பு

இதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் அதிவிரைவுப்படையினர், வஜ்ரா வாகனம், 300க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸார் என சம்பவ இடத்தில் குவித்தார்.

எச்சரிக்கை விடுத்தும் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டவர்களை தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கலைத்தனர்.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓட, அந்த இடமே போர்களம் போல் காட்சியளித்தது.

200க்கும் மேற்பட்டோர் கைது

அதன் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கு மேற்பட்டோரை கைது செய்த போலீசார், பஸ், கார்கள் மீது கற்களை வீசிய நபர்களை, வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து கைது செய்து வருகின்றனர்.

போராட்டத்தால் 4 மணி நேரமாக 15 கி.மீ தூரத்திற்கு ஸ்தம்பித்து நின்ற போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உள்ளதால், கிருஷ்ணகிரி – பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

கியாரா – சித்தார்த் ஜோடி திருமணம் : களைகட்டும் ஜெய்சால்மர் பேலஸ்!

எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க முடியாது: தேர்தல் ஆணையம்!

+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *