தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வழக்கமாக சின்ன வெங்காயத்தின் விலை கூடுதலாகவும், பெரிய வெங்காயத்தின் விலை குறைவாகவும் இருக்கும்.
தற்போது பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் சின்ன வெங்காயத்தை விட பெரிய வெங்காயம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இன்னும் மூன்று மாதங்களுக்கு வெங்காய விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
உதாரணத்துக்கு, திருச்சியில் உள்ள மொத்த விற்பனை சந்தைக்கு விளைச்சல் அதிகம் இருக்கும் காலங்களில் தலா 500 டன் பெல்லாரி வெங்காயம் (பெரிய வெங்காயம்), சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) விற்பனைக்கு வரும்.
பெல்லாரி வெங்காயத்தைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகம் வரும்.
ஆனால், மழை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து வரத்து இல்லை. ஆந்திராவில் இருந்து மட்டும் ஒரு வாரமாக தினந்தோறும் 100 டன் வருகிறது.
இது தவிர, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் இருந்து 200 டன் வருகிறது. இதனால், கடந்த மாதம் கிலோ ரூ.35-க்கு விற்பனையான பெல்லாரி வெங்காயம், தற்போது மொத்த விலையில் ரூ.45-க்கும், சில்லறை விலையில் ரூ.45 முதல் ரூ.60 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல, பெரம்பலூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் 200 டன் அளவுக்கும், கர்நாடக மாநிலத்திலிருந்து 100 டன் அளவுக்கும் சாம்பார் வெங்காயம் திருச்சிக்கு வருகிறது.
இந்த வெங்காயம் கடந்த மாதம் கிலோ ரூ.40-க்கு விற்ற நிலையில், தற்போது சற்று விலை குறைந்து மொத்த விலையில் கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரையும், சில்லறை விலையில் ரூ.30 முதல் ரூ.50 வரையும் விற்பனையாகிறது.
இதுகுறித்து பேசியுள்ள வெங்காய தரகு மண்டி வர்த்தகர் சங்கத்தினர்,
“ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரத்து குறைந்ததால் பெல்லாரி வெங்காயம் விலை சற்று அதிகரித்துள்ளது. இன்னும் 15 நாட்களில் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பெல்லாரி வெங்காயம் வரும்.
அப்போது, சற்று விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், தற்போது ஆந்திராவில் மழை பெய்து வருவதால், கிலோவுக்கு மேலும் ரூ.20 வரை விலை உயர வாய்ப்புள்ளது.
சாம்பார் வெங்காயத்தை பொறுத்தவரை தற்போது தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவதால், விலை சற்று குறைவாக உள்ளது.
செப்டம்பர் கடைசி வாரத்தில் இதன் விலை சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், மழைக்காலம் தொடங்கிவிட்டாலும், இதன் வரத்து குறைந்து, விலை சற்று அதிகரிக்கும்.
எப்படிப் பார்த்தாலும், இன்னும் மூன்று மாதங்களுக்கு பெரிய மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள் : மோடி புரூனை பயணம் முதல் தமிழகத்தில் மழை வரை!
ஹெல்த் டிப்ஸ்: உடல்வலிக்கு ஒத்தடம் கொடுக்கலாமா?
2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் சாதனை படைத்த தமிழக வீராங்கனைகள்!