வட இந்தியாவின் அனைத்து உணவகங்களிலும் வழங்கப்படும் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று பிண்டி மசாலா. வெண்டைக்காயின் கொழகொழப்பு தன்மையில்லாமல் இருக்கும் இந்த பிண்டி மசாலாவை நீங்களும் செய்து அசத்தலாம். வீட்டிலுள்ளவர்களுக்கு விருந்து படைக்கலாம்.
என்ன தேவை?
வெண்டைக்காய் – கால் கிலோ (ஒரு இன்ச் அளவுக்கு வெட்டவும்)
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய தக்காளி – 2
சீரகம் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு பேஸ்ட் – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியா) – 2டீஸ்பூன்
சாட் மசாலா – அரை டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
வெண்ணெய் – 25கிராம்
எண்ணெய் – 25கிராம்
கஸூரி மேத்தி – சிறிது
எலுமிச்சைச் சாறு – சில துளிகள் (விருப்பப்பட்டால்)
முந்திரி பேஸ்ட் – 4டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிது
எப்படிச் செய்வது?
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, அதில் வெண்டைக்காயை சேர்த்து பத்து நிமிடம் அதன் வழுவழுப்பு போகிற வரை வதக்கவும். வழுவழுப்புத் தன்மை அப்படியே இருந்தால் லேசாக எலுமிச்சை சேர்த்து வதக்கினால் வழுவழுப்புத் தன்மை போய் விடும். இதனை தனியாக எடுத்து வைக்கவும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் வெண்ணெய் சேர்த்து சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பிரவுன் நிறம் ஆகும் வரை வதக்கவும். இதில் இஞ்சி – பூண்டு பேஸ்ட், தக்காளி, முந்திரி பேஸ்ட், உப்பு சேர்த்து கிரேவி பதம் வரும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
பின்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியா), கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி சிறிது எண்ணெய் விட்டு இரண்டு நிமிடம் போட்டு வதக்கவும். வதக்கிய வெண்டைக்காயை இதில் சேர்த்து வதக்கவும். இதில் கஸூரி மேத்தி சேர்த்து இரண்டு நிமிடம் வேக விட்டு சாட் மசாலா சேர்த்து இறக்கி பரிமாறவும். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.