பாரதியார் பிறந்த நாள்… மோடி முதல் ஸ்டாலின் வரை… குவியும் வாழ்த்து!
மகாகவி பாரதியாரின் 143வது பிறந்த நாளை (டிசம்பர் 11) முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி என்ற இயற்பெயர் கொண்ட பாரதியார், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் டிசம்பர் 11, 1882 ஆம் ஆண்டு பிறந்தார்.
பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி காலமானார்.
இந்த நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு பல தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நரேந்திர மோடி
சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தொலைநோக்கு கவிஞர், எழுத்தாளர், சிந்தனையாளர், சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான பாரதியாரின் வார்த்தைகள் எண்ணற்ற மக்களிடையே தேசபக்தி மற்றும் புரட்சியின் தீப்பிழம்புகளை பற்றவைத்தன.
சமத்துவம் மற்றும் பெண்கள் பற்றிய அவரது முற்போக்கான கொள்கைகள் நமக்கு ஊக்கமளிக்கின்றன.
இன்று, டெல்லியில் மதியம் 1 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அவரது படைப்புகளின் தொகுப்பை வெளியிடுகிறேன்.
ஆளுநர் ரவி
சென்னை ஆளுநர் மாளிகையில், பாரதியின் 143வது பிறந்தநாளில் அவரது தீவிர பற்றாளர்களுடன் சேர்ந்து ஆளுநர் ரவி பாரதியின் ஜதி பல்லக்கு ஊர்வலத்தை கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்த ஜதி பல்லக்கு, மகாகவி பாரதியாரின் நினைவு இல்லத்துக்குச் சென்றதும் அவருக்கு மரியாதை செலுத்தப்படும்.
முதல்வர் ஸ்டாலின்
உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன். தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்.
மொழி – நாடு – பெண் விடுதலை – பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமது எண்ணங்களாலும், எழுத்துக்களாலும் மாபெரும் புரட்சி செய்த முன்னோடி, நம் மகாகவி, சுப்பிரமணிய பாரதியார் பிறந்த தினம் இன்று. வாழ்க்கை முறைகளையும், நன்னெறிகளையும், தன் எழுத்துக்களால் சுடர்விடச் செய்தவர்.
பன்மொழி வித்தகர். கல்வி, தமிழ் மொழி, சமூக நீதி, பெண் விடுதலை, தேசியம் என அனைத்து துறைகளிலும் தொலை நோக்குச் சிந்தனை கொண்டவர்.
தாய்மொழியையும், தாய்நாட்டையும் தம் உயிரெனக் கொண்டிருந்த மகாகவி பாரதியாரின் புகழ் போற்றி வணங்குகிறோம்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்
முன்னைப் பழைமையும் பின்னை நவீனத்துவமும் கைகோத்த விந்தைக்குச் சொந்தக்காரர் மகாகவி பாரதி.
என்றைக்குமான சிந்தனைகளை நமக்குத் தந்துவிட்டுப் போன பெருங்கவிஞரின் பிறந்த நாளில் அவர்தம் சொற்களைச் சிந்தித்து வாழ்த்துவோம்.
“ஓய்தல் ஒழி குன்றென நிமிர்ந்து நில் சிதையா நெஞ்சு கொள் தீயோர்க்கு அஞ்சேல் புதியன விரும்பு” என்று பாரதியாரை அவரது பிறந்தநாளில் தலைவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
டெல்லி சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸுடன் கூட்டணி இல்லை… கெஜ்ரிவால் அறிவிப்பு!
சென்னையில் இன்று கனமழையா? – பிரதீப் ஜான் லேட்டஸ்ட் அப்டேட்!