இஸ்லாமிய வீட்டுத் திருமணம் என்றாலே பிரியாணியையும் தாண்டி ருசியில் பட்டையைக் கிளப்பும் உணவு இந்த நெய்ச் சோறு. இதில் மிளகு முட்டை கிரேவி, செட்டிநாடு சிக்கன், மட்டன் சுக்கா சேர்த்து சாப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – கால் கிலோ
நெய் – 100 கிராம்
பட்டை – 3 துண்டுகள் (சிறியது)
கிராம்பு – 4
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – ஒன்று
இஞ்சி – பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கவும்)
தயிர் – கால் கப்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி, புதினா – தலா ஒரு கொத்து
முந்திரிப்பருப்பு – 10
பாதாம்பருப்பு – 5 (விருப்பமெனில்)
உப்பு – தேவையான அளவு
எப்படி செய்வது?
முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு ஆகிய இரண்டையும் 15 நிமிடங்கள் ஊறவைத்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். அரிசியை 20 நிமிடங்கள் ஊறவைத்து கழுவி வடித்துக்கொள்ளவும். அடுப்பில் குக்கரைவைத்து நெய்விட்டு சூடாக்கவும். அதில் ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். பின்னர் அதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தயிர் மற்றும் அரைத்துவைத்த முந்திரி, பாதாம் விழுதைச் சேர்க்கவும். பின்னர் இதனுடன் ஊறவைத்து வடித்து வைத்த அரிசியைப் போட்டுக் கிளறவும். இதனுடன் ஒரு பங்கு அரிசிக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் என்கிற விகிதத்தில் தேவையான தண்ணீரைச் சேர்க்கவும். பின்னர் இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடவும். கலவையை இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும். சுவையான நெய்ச் சோறு தயார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: வெள்ளை குருமா
கிச்சன் கீர்த்தனா: அரிசி மாவு டேப் சிப்ஸ்