கொரோனா வைரஸின் பிறழ்வான ஒமிக்கிரான் வேரியண்ட் பிஎப் 7 தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் 4 பேருக்கு பிஎப் 7 உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் மீண்டும் ஊரடங்கு வருமா? பொது இடங்களுக்குச் செல்ல கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற கவலையும் கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
ஊரடங்கு விதிக்கப்படும் அளவுக்கு பிஎப் 7 வைரசின் தீவிரம் இருக்குமா? அதிக உயிரிழப்புகள் ஏற்படுமா? என அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு பதிலளித்துள்ளார் தொற்று நோய் நிபுணர் ராமசுப்ரமணியன்.
முதல்வரின் கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெறும் பிரபல மருத்துவரான ராமசுப்ரமணியன் சன் நியூஸ் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், “ இதுபோன்ற உருமாறிய வைரஸ் பரவும் என்பது எதிர்பார்த்ததுதான். ஏனென்றால் இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகள் கொரோனா பரவல் இருக்கும்.
தடுப்பூசியை கண்டுபிடித்து முன்னெச்சரிக்கையாகச் சிகிச்சை கொடுப்பதன் மூலம் இந்த வைரசில் பிறழ்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இப்போது பரவக்கூடிய வைரஸ் ஒமிக்ரான் எப்படி ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவியதோ, அதுபோன்று தான் பரவும்.
ஆனால் அறிகுறிகளைப் பொருத்தவரை லேசானதாகத்தான் இருக்கும்.
புதிய வகை கொரோனா உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றெல்லாம் வாட்ஸ் அப்பில் பரப்பப்படுகிறது. அதிகளவு பரவ வாய்ப்பு இருந்தாலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பயப்பட தேவையில்லை.
இதன் அறிகுறிகள் முந்தைய வைரஸ்களை போலவே இருக்கும். காய்ச்சல், தொண்டை வலி, மூக்கடைப்பு, உடம்பு வலி ஆகியவை ஏற்படும். புதிதாக அறிகுறிகள் இருக்கும் என்று தெரியவரவில்லை.
ஒமிக்ரான் பிஎப்7 வகை கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரமும் இல்லை. ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு தீவிர பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்று தெரிவித்தார்.
பிரியா
ஜேஇஇ தேர்வில் சிக்கல்: பள்ளிக்கல்வித்துறை சொன்ன ஆறுதல்!
நிலத்துக்கு உரிய இழப்பீடு: ஆட்சியர் அலுவலகங்களில் தொடரும் ஜப்தி நடவடிக்கை!