பிஎப் 7 கொரோனா – தமிழகத்தின் நிலை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

தமிழகம்

தமிழகத்தில் கொரோனா பரவல் நிலவரம் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

இந்தியாவில் பிஎப்7 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இந்த தொற்று பரவியுள்ளது இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பது, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட அறிவுரைகளைப் பிரதமர் மோடி வழங்கினார்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாகச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

இன்று(டிசம்பர் 23) காலை தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர்,

“உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மருந்துகள் கையிருப்பு, போதுமான படுக்கைகள், ஆக்சிஜன் வசதி ஆகியவை கையிருப்பில் இருப்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் தொற்றுபரவல் அதிகரித்து வரும் நிலையில், அங்கிருந்து வருபவர்களுக்கு, கொரோனா அறிகுறிகள் இருந்தால், பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

குறிப்பாக ஜப்பான், சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களை ரேண்டமாக 2 சதவீதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் ஃபீவர் ஸ்கீனிங் முறை இருக்கிறது. அதில் வருபவர்களில் யாருக்காவது சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்யப்படும்.

நாளை, முதல் ரேண்டமாக 2 சதவீதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இன்று பிற்பகல் மூன்று மணிக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொளி காட்சி மூலம் ஆலோசனை செய்கிறார். அதில் நானும் கலந்துகொள்கிறேன்.

தமிழகத்தில் ஆறு மாதத்திற்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் இருக்கிறது. படுக்கைகளைப் பொருத்தவரை ஏற்கனவே ஏற்பாடு செய்த படுக்கைகள் அனைத்தும் கையிருப்பில் இருக்கிறது.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், தமிழகம் முழுவதிலும் திறந்து வைக்கப்பட்டது. குழந்தைகளுக்கும் பிரத்யேகமாகப் படுக்கைகள் உள்ளது.

அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் இருப்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணையாக 96சதவீதம், இரண்டாவது தவணையாக 92சதவீதம் போடப்பட்டுள்ளது.

இதனால், 90சதவீதத்துக்கு மேற்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தொடர்ச்சியாக இருக்கிறது.

கடந்த 6 மாத காலமாக கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. கடந்த 10 நாட்களில் 6, 7, 8என்கிற ஒற்றை எண்ணிக்கையில் தான் பாதிப்பு உள்ளது. எனவே மிக பாதுகாப்பான நிலையில் தமிழகம் உள்ளது.

மேலும், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பாதுகாப்புக்காக மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற பாதுகாப்பு விதிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

மத்திய அரசு கொரோனா தடுப்பூசி தயாரிப்பதை நிறுத்தி வைத்துள்ளதால் தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை” என்று கூறினார்.

பிரியா

“ஹெல்மெட் அணியாத போலீசார் மீது கடும் நடவடிக்கை” – டிஜிபி எச்சரிக்கை!

அமைச்சரை மிரட்டிய சசிகலா புஷ்பா: வழக்குப்பதிவு செய்த காவல்துறை

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *