தேனி மாவட்டத்தில் நிலவி வரும் சாரல் மற்றும் பனியினால் செடியிலே வெற்றிலைகள் அதிகளவில் கருகி வருகின்றன. மேலும் மார்கழியில் வெற்றிலை தேவை குறைந்துள்ளதால் இதன் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஜெயமங்கலம், சின்னமனூர், வடுகபட்டி, சில்வார்பட்டி, மார்க்கையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. சக்கை, சைடுமார், இளங்கால், முதியால் உள்ளிட்ட ரகங்கள் வளர்க்கப்படுகின்றன. இங்கு விளையும் வெற்றிலைகள் புதுச்சேரி, மதுரை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
தற்போது தென் மாவட்டங்களில் சாரல் மழையுடன் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. இதனால் கொடிக்காலில் உள்ள வெற்றிலைகள் வாடி சுருள்வதுடன் நிறமும் மாறி கருகி விடுகின்றன. இதனால் மகசூல் வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்கழி என்பதால் திருமணம், கோயில் திருவிழாக்கள் குறைந்துள்ளதால் வெற்றிலையின் தேவை வெகுவாய் குறைந்துள்ளது.
இந்த காரணங்களால் வெற்றிலையின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.250-க்கு விற்பனையான வெற்றிலை ரூ.150 ஆக குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து பேசியுள்ள மார்க்கையன்கோட்டையைச் சேர்ந்த விவசாயி ஒருவர், “வெற்றிலை மருத்துவகுணம் கொண்டது. இதன் மகத்துவத்தை இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்வதில்லை. இதனால் வெற்றிலை விவசாயமும் குறைந்துவிட்டது. இந்த நிலையில் பனி, மழையினால் வெற்றிலைச் செடிகள் வாடிவிட்டன. தை மாதத்துக்குப் பிறகு தேவை அதிகரிக்கும் நிலை உள்ளதால் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: ஹேர் கலர்… ப்ளீஸ் கேர்!
கிச்சன் கீர்த்தனா: கார பிஸ்கட்!