பிரதமர் மோடி எங்களது சொந்தக்காரர் போல அருகில் நின்று பாராட்டிப் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பெள்ளி தெரிவித்துள்ளார்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆஸ்கர் விருது பெற்ற எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் பெள்ளி தம்பதியினரை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்து பேசினார்.

புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-ஆவது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று பந்திப்பூரா புலிகள் காப்பகத்திற்கு சென்று வனவிலங்குகளை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து முதுமலை தெப்பக்காடு யானை வளர்ப்பு முகாமில் யானைகளை பார்வையிட்டு கரும்பு வழங்கினார்.
பின்னர், எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் பெள்ளி தம்பதியினரை சந்தித்து அவர்களிடம் கலந்துரையாடினார். தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிட்ட பிரதமர் மோடி மைசூருக்கு சென்றார்.
இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பொம்மன் பெள்ளி ஆகியோருடன் பொம்மி மற்றும் ரகுவை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியிடம் உரையாடியது குறித்து பெள்ளி கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி யானை குட்டிக்கு கரும்பு கொடுத்து எங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். யானைக்குட்டியை நன்றாக வளர்த்துள்ளீர்கள். இந்த மாதிரி யானை குட்டியை வளர்த்தவர்களை நான் பார்த்ததில்லை என்று கூறி பாராட்டினார்.

நாங்கள் வசிக்கும் பகுதியில் ஆதிவாசிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். இங்கு சாலை வசதிகள் சரியில்லாததால் மழை காலங்களில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. நிறைய பேருக்கு வீடுகள் மற்றும் மின்சார வசதிகள் இல்லை. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி பிரதமரிடம் கேட்டிருந்தேன்.
உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவேன் என்று அவர் கூறினார். யானை குட்டிகளுடன் நாங்கள் எடுத்த போட்டோ மற்றும் சால்வையை பிரதமரிடம் கொடுத்தோம்.
யானை குட்டிகளை எனது மகன்கள் என்று அவரிடம் கூறினேன். டெல்லிக்கு எங்களை அழைத்தார். மோடி எங்களது சொந்தக்காரர் போல அருகில் நின்று பாராட்டி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்
Comments are closed.