ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மை பீட்ரூட்டுக்கு உண்டு. ஆனால் பீட்ரூட்டின் நிறத்தைப் பார்த்தே அதை ஒதுக்குபவர்கள் அதிகம். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பீட்ரூட் டிக்கி செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள். இன்னும் கொஞ்சம் கேட்பார்கள்.
டிக்கி செய்ய என்ன தேவை?
பீட்ரூட் (துருவியது) – ஒரு கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு – ஒன்று
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள், ஆம்சூர் பவுடர் (மாங்காய்தூள்), மல்லித்தூள் (தனியாத்தூள்), சாட் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன்
பிரெட் தூள் – அரை கப்
வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்)
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
கரைக்க…
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – 2 டீஸ்பூன்
மைதா – 2 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் – சிறிதளவு
எப்படிச் செய்வது?
டிக்கி செய்ய கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் (பிரெட் தூள், எண்ணெய் நீங்கலாக) ஒன்றாகக் கலக்கவும். பின்பு, ஒரு சிறு கிண்ணத்தில் கரைக்கக்கொடுத்துள்ள கார்ன்ஃப்ளார், மைதா, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கலந்துகொள்ளவும்., மேலே உள்ள கலவையை சிறு டிக்கிகளாகச் செய்து, கலந்துவைத்துள்ள மாவில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, எண்ணெயில் பொரிக்கவும்.