சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலின்போது சிலர் ரகளையில் ஈடுபட்டு மேஜை, நாற்காலிகளை உடைத்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
சுமார் 150 ஆண்டுகள் பழமையான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு தலைவர், பொருளாளர், செயலாளர், நூலகர், செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் சரியாக இன்று காலை 10 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற இருந்தது.
இந்த தேர்தலில் சுமார் 4,760 வழக்கறிஞர்கள் வாக்களிக்க இருந்தனர். தேர்தல் அலுவலராக மூத்த வழக்கறிஞர் கபீர் என்பவரை சென்னை உயர்நீதிமன்றம் நியமனம் செய்து இருந்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடைபெறாமல் இருந்த இந்த தேர்தலில் வாக்களிக்க காலை முதலிலே வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த வண்ணம் இருந்தனர்.
மேலும் இந்த தேர்தலில் பெண்கள் வாக்களிக்க தனி வரிசையும், மூத்த வழக்கறிஞர்கள் வாக்களிக்க தனி வரிசையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தேர்தல் நடைபெறுவதால் கியூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்த பிறகே வாக்காளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் ஆரம்பத்திலேயே அந்த க்யூ ஆர் கோடு முறையாக வேலை செய்யாததாலும் கல்லூரி மாணவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்ததாலும் ஒருதரப்பு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருந்தபோதிலும் தேர்தல் சரியாக 10.40 மணிக்கு மேல் தொடங்கியது. அப்போதே ஒரு தரப்பு வழக்கறிஞர்கள் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் அல்லது தேர்தலை வேறு தேதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர்.
மேலும் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்கு சீட்டை ஒரு தரப்பினர் வெளியே கொண்டு சென்றதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இந்த நிலையில் தேர்தல் உள்ளே நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தர்ணாவில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர்கள் ஒரு சிலர் உள்ளே புகுந்து அங்கே தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்டு இருந்த பொருட்களை அடித்து உடைத்து கீழே தள்ளினர்.
மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவர்களை உடனடியாக வெளியே செல்லுங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் தேர்தல் நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து தேர்தல் நடத்தும் தலைமை அலுவலர் கபீர், வழக்கறிஞர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
இன்று நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியிடம் முறையிடப்படும் என்றும் கூறினார்.
மேலும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் அலுவலர் கபீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கலை.ரா
அரசுக்கும், ஆளுநருக்கும் அன்புமணியின் வேண்டுகோள்!
ஆளுநரை கூப்பிட்டு அசிங்கப்படுத்துவீர்களா? – வானதி சீனிவாசன் காட்டம்!