சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) நடைபெற்ற வங்கி நகைக் கொள்ளையில், அங்கு பணிபுரிந்த காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து கொள்ளையடித்து சென்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் ஃபெடரல் வங்கி நகைக்கடன் கிளை இயங்கி வருகிறது.
இந்த வங்கியில் இன்று (ஆகஸ்ட் 13) பிற்பகல் 3 மணியளவில் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல் ஊழியர்களைக் கட்டிப் போட்டு 20 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றது.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நகைகளை அதன் வங்கி ஊழியரே கொள்ளையடித்து சென்றுள்ளார் என தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டு கொள்ளையர்களை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து இன்று (ஆகஸ்ட் 13) செய்தியாளர்களிடம் பேசிய அந்த வங்கியின் காவலாளிகளில் ஒருவர், “இந்த வங்கியில் வேலை பார்த்த முருகன் என்பவன், இரண்டு குளிர்பானங்களைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்து அருந்தச் சொன்னான். நான் சாப்பிடவில்லை.
அவன் தொடர்ந்து வற்புறுத்தினான். இதையடுத்து அதில் ஒன்றை எடுத்து கொஞ்சமாய் குடித்தேன். மற்றதை கீழே ஊற்றிவிட்டேன். அதைக் குடித்தபிறகு எனக்கு தலைசுற்றல் வந்தது. அதன்பிறகுதான் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது.
நான், இந்த வங்கியில் இரண்டரை வருடமாகப் பணிபுரிகிறேன். இதுவரை, எந்தக் கொள்ளைச் சம்பவங்களும் இங்கு நடந்ததில்லை. இதுதான் முதல் முறை” என்றார்.
போலீஸார் இந்தத் தகவலின் அடிப்படையில் விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளார்கள்.
ஜெ.பிரகாஷ்
வங்கிக் கொள்ளை: 4 தனிப்படை அமைத்து தேடுதல்!