வங்கிக் கொள்ளை: 4 தனிப்படை அமைத்து தேடுதல்!

Published On:

| By Kalai

சென்னையில் பட்டப்பகலில் வங்கியில் நுழைந்த கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 20 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

அரும்பாக்கத்தில் பெடரல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தங்கநகைக் கடன் பிரிவாக ஃபெட் வங்கி இயங்கி வருகிறது.

இங்கு இன்று (ஆகஸ்ட் 13) பிற்பகல் 3 மணியளவில் முகமூடி அணிந்து 4 நபர்கள் நுழைந்து இருக்கின்றனர்.

அவர்கள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வங்கி ஊழியர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து மேலாளர் அளித்த புகாரின் பேரில் கூடுதல் காவல் ஆணையாளர் அன்பு தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது.

ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருக்கின்றனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

சுற்று வட்டாரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதில் எம்எம்டிஏ அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சிலர் செல்லும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இந்தநிலையில் வங்கியின் ஊழியரே கொள்ளையில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

கொள்ளையர்கள் வேறு மாநிலத்திற்கு தப்பிச் செல்லாத வகையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருக்கின்றனர். வங்கியில் கொள்ளை போன நகைகளின் மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது.

கொள்ளை போன வங்கி லாக்கரில் நகைகளை வைத்தவர்கள் குவியத் தொடங்கி இருப்பதால் அரும்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

கலை.ரா

பல்கலைத் தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக தலைவருக்காக எழுதியவர் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel