தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வங்கதேசத்தில் இருந்து ஆடைகள் இறக்குமதி செய்யப்படுவதால் திருப்பூரில் பின்னலாடை தொழில் நசிந்து வருவதாகவும், தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டைவிட விற்பனை சரி பாதியாக குறைந்துள்ளதாகவும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள பெரு நகரங்களில் ஒன்றான திருப்பூர் மாவட்டத்தில் தயாராகும் பின்னலாடைகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் என கோலோச்சி வந்தது.
அந்நிய செலாவணியை அதிக அளவில் ஈட்டி தரும் மாவட்டமாகவும் விளங்கியது.
குஜராத், மும்பை, டெல்லி, கொல்கத்தா என உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் திருப்பூரில் இருந்து பனியன் ஆடைகள் வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது நூல் விலை உயர்வு போன்ற காரணங்களால் ஆடைகளின் விலை உயர்ந்துள்ளது.
எனவே, குஜராத்தில் இருந்து பாலியஸ்டர் நூல்கள் வரவழைத்து ஆடை தயாரிக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும், காட்டன் நூல்களுக்கான விலையும் அதிகம் என்பதால் அவற்றின் தயாரிப்பும் திருப்பூரில் சரிந்து வருகிறது.
காட்டன் ஆடையை தயாரிக்க முடியாமல் இருந்த வட மாநிலங்கள் தற்போது பாலியஸ்டர் பனியன்களைத் தயாரிக்க தொடங்கி உள்ளதால் விற்பனையில் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு வங்கதேசத்திலிருந்து 20 முதல் 30 ரூபாய் குறைவான விலையில் வரிச்சலுகை மூலமாக கொல்கத்தாவுக்கு ஆடைகள் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனால் திருப்பூரில் பின்னலாடை வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக, பொதுமக்களிடையே பணப்புழக்கம் இல்லாததால் வாங்கும் திறன் குறைந்து உள்ளதாகவும்,
இதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கு விற்பனை 50 சதவிகிதம் சரிந்துள்ளதாகவும் வர்த்தகர்கள் மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: முளைகட்டிய பயறு சோயா கிரேவி
டிஜிட்டல் திண்ணை: ஆளுநரின் ‘124’ திட்டம்… முளையிலேயே முறியடித்த ஸ்டாலின்