ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது தமிழக அரசு மாற்று வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பணகுடி ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்த சிவன்ராஜ் என்பவர் ஒட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக ரம்மி விளையாடி பணத்தை இழந்த இவர் தொடர்ந்து விளையாடுவதற்காகத் தனது தந்தை மற்றும் நண்பர்களிடம் பணத்தைக் கடன் வாங்கியுள்ளார்.
இவ்வாறு கடன் வாங்கி ரம்மி விளையாடியதில் இதுவரை 6 லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.
இருப்பினும் தனது தந்தையிடம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி 1 லட்சம் ரூபாயை வாங்கி சென்று அதனையும் ஆன்லைன் ரம்மி விளையாடி இழந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சிவன்ராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடலைக் கைப்பற்றி காவல்துறையினர் மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட மரணங்களைத் தடுக்க ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனே அனுமதி அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “நெல்லை மாவட்ட பணகுடி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சத்தை இழந்த சிவன்ராஜ் என்ற பட்டதாரி நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது.
ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 40-ஆவது தற்கொலை இதுவாகும்.
பட்டதாரி இளைஞர் சிவன்ராஜ் பெரும் பணத்தை இழந்த நிலையில், அவரது தந்தை, வீட்டு உடைமைகளையும், கால்நடையையும் விற்றுக் கொடுத்த ரூ. 1 லட்சத்தையும் சூதாடி இழந்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் இளைஞர்களை எந்தளவுக்கு அடிமையாக்குகிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.
சிவன்ராஜை போன்று ஏராளமான இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இந்த உண்மைகளை அறிந்தும் ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் இனியும் தொடரக்கூடாது. எனவே, தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசியலமைப்பு சட்டத்தின் 162-ஆவது பிரிவைப் பயன்படுத்துவது உள்ளிட்ட மாற்று வழிகளைத் தமிழக அரசு ஆராய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
திருச்சியில் 100 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உத்தரவு!