குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையையொட்டி நாளை (மார்ச் 18) கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளா, தமிழகம் மற்றும் லட்சதீவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாள் பயணமாக நேற்று (மார்ச் 16) டெல்லியில் இருந்து புறப்பட்டு கேரளாவிற்கு வந்தார்.
நேற்று மாலை கேரளா, கொச்சி நகருக்கு சென்று உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்தை பார்வையிட்டார்.
அதன்பின் கடற்படை பயிற்சித்தளம் ஐஎன்எஸ் துரோணாச்சாரியாவுக்கு குடியரசுத் தலைவரின் கொடியை அவர் வழங்கினார்.
தொடர்ந்து 2வது நாளாக இன்று (மார்ச் 17) கொல்லத்தில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்துக்கு செல்கிறார்.
பின்னர் திருவனந்தபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவுள்ளார். மேலும், கேரள டிஜிட்டல் பல்கலைக்கழகம் மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ள டிப்ளமோ மற்றும் பொறியியல் தொழில்நுட்ப பாடப் புத்தகங்களை அவர் வெளியிடுகிறார்.
3வது நாள் பயணமாக நாளை தமிழகம் வரும் திரவுபதி முர்மு, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றைப் பார்வையிடவுள்ளார்.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் நேற்று ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகையையொட்டி நாளை கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களில் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு மற்றும் அவரது சுற்றுப்பயணத்திற்கு இடையூறு ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது.
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு 2-வது முறையாக திரவுபதி முர்மு தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முன்னதாக கடந்த மாதம் 18 ஆம் தேதி கோவை ஈஷா மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகத் தமிழகம் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
பால் உற்பத்தியாளர்கள் சங்கம் போராட்டம்!
வன்முறை பேச்சு: உதயகுமார் மீது திமுக புகார்!