ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மீது தமிழ்நாடு அரசு விதித்த தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் இன்று (அக்டோபர் 20) தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒரு முறை பயன்படுத்தும் பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகளுக்கு தமிழக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு தடை விதித்து அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்திருந்தது.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, தமிழ்நாடு, புதுச்சேரி பேப்பர் கப் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், “தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் தடை முடிவால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து பெறப்படும் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் அங்கீகாரத்தை (EPR) பெற முடியாமல், உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு முழுமையாக தடை விதிக்கப்பட்டது. ஆனால் பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் கொடிகள், உணவு பேக்கிங் டப்பாக்கள் உள்ளிட்டவை பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இதனால் பிளாஸ்டிக் தொழிலை நம்பி உள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறதே தவிர தமிழ்நாடு அரசின் நோக்கம் நிறைவேறவில்லை. எனவே பிளாஸ்டிக் பைகள் மீதான தமிழ்நாடு அரசின் தடையை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் அங்கீகாரத்தைப் பெறும் வகையில், 2020 ஆம் ஆண்டு அரசாணையில் மாற்றம் செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது.
மேலும், பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீதான தடையை மத்திய அரசு கொண்டு வந்துள்ள வழிகாட்டுதலின்படி மறு பரிசீலனை செய்யவும் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
’அச்சம் வேண்டாம்’: அவசர எச்சரிக்கை ஒலியின் பின்னணி இதுதான்!
விராட் கோலியின் சிங்கிள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கே.எல்.ராகுல்