தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் இன்று (ஆகஸ்டு 27) மாலை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் அண்மைக் காலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இதுவரை 20 பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
எனவே, ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து, ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக தமிழக அரசு பொதுமக்களிடம் கருத்து கேட்டது. இதுதொடர்பாக அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது குறித்த அவசியம் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உளவியல் நிபுணர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகக் கூடிய தீமையைப் பற்றி கவலை தெரிவித்து வருகின்றனர்.
சமீப காலங்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் கற்றல் குறைபாடுகள் மற்றும் பல சமூக ஒழுக்க குறைபாடுகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
பல்வேறு நாடுகளில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தியோ அல்லது தடை செய்தோ சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
அதேபோன்று ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அந்தக்குழுவின் அறிக்கை, அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது. எனவே ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது தொடர்பாக கருத்துகளை பகிர விரும்புவோர், homesec@tn.gov.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு 12.08.2022ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தது.
மேலும் ஆன்லைன் விளையாட்டு தடைச் சட்டம் தொடர்பாக வரும் 29 ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வந்தன.
இந்தநிலையில் ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் முதலமைச்சரின் தனிச் செயலாளர் உதயச் சந்திரன், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக எடுக்கவேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசித்து வருகிறார்.
கலை.ரா
ஆன்லைன் சூதாட்ட அவசரச் சட்டம் பிறப்பிக்காமல் தாமதிப்பது ஏன்? – ராமதாஸ்