குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் கொண்டு வந்து தடை செய்ய தமிழ்நாடு அரசுஅரசாணை பிறப்பித்ததை எதிர்த்து புகையிலை நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், குமரேஷ் பாபு தமிழ்நாடு அரசின் அரசாணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல் முறையீட்டு வழக்கை கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜோசப், நாகரத்னா அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து குட்காவுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு புதிய அரசாணை பிறப்பிக்கலாம் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், மெல்லும் புகையிலை பொருட்கள், குட்கா, பான் மசாலா போன்றவற்றின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனைக்கான தடை காலம் நேற்றுடன் (மே 23) நிறைவடைந்த நிலையில், தடை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், மே 23 முதல் அடுத்த ஒரு வருட காலத்திற்கு, புகையிலை அல்லது நிகோட்டின் அடங்கிய பிற உணவுப் பொருட்களைக் கலப்பதற்கும் தடை நீட்டிக்கப்படுவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குட்கா மற்றும் பான் மசாலா ஆகிய பொருட்களை உட்கொள்வது மனித ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் ஆபத்தை விளைவிக்கும். அதேசமயம், இந்த உணவுப் பொருட்களை தடை செய்யாமல் அனுமதித்தால், தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு பாதிக்கப்படும், எனவே இது தடை செய்யப்பட வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
சிங்கப்பூர் முன்னணி நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை!
ஐபிஎல் தொடரில் மீண்டும் தோனி?: அவரே அளித்த அட்டகாசமான பதில்!