ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்துச் செல்ல தடை : இதுவரை பறக்கும் படை பறிமுதல் செய்தது எவ்வளவு?

தமிழகம்

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புப்படை, வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஒவ்வொருவரும் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரைதான் ரொக்கப்பணம் கொண்டு செல்ல முடியும்.  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரூ.10 ஆயிரத்திற்கு மேல் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை எடுத்து சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படை என மொத்தம் 1,404 படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, நேற்று (மார்ச் 16) கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரம்பயம் பகுதியைச் சேர்ந்த கலைவாணன், தனது காரில் ரூ.4.80 லட்சம் எடுத்து வந்தது தெரிய வந்தது. அவரிடம் அந்த பணத்திற்கான உரிய ஆவணம் ஏதும் இல்லாததால், அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த சுரேஷ், தனது காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.03 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் குளித்தலை கோட்டாசியரிடம் ஒப்படைத்தனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குமலன்குட்டை வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்ததில், சசிக்குமார் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2.36 லட்சம் எடுத்து வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தேர்தல் கட்டுப்பாடு அறையில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, இன்று (மார்ச் 17) மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் முக்கூட்டில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.86 லட்சம் பணம் பறிமுதல் செய்யபப்ட்டது. அது, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அதேபோல், வாணியம்பாடி அருகே செட்டியப்பனூரில் வாகன சோதனையின் போது ரூ.2.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மின் சரக்கு வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை எடுத்துச் சென்றவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூரில் உரிய அனுமதியின்றி வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.74,550 மதிப்பிலான குக்கர்கள், குத்து விளக்குகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அதன்படி இதுவரை ரூ. 2 கோடிக்கும் அதிகமான பணம், பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டுள்ள பறக்கும் படையினர் பல இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்படும் பணம், உரிய ஆவணங்களை சமர்பித்து அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். உரிய ஆவணங்கள் சமர்பிக்காத நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் அதிகாரிகளிடம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ஒருவர் எடுத்துச் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.50 ஆயிரத்திற்கு அதிகமாக ஒருவர் பணம் எடுத்துச் செல்கையில் அதற்கான உரிய ஆவணங்கள், அதாவது, மருத்துவ செலவிற்காக பணம் எடுத்து செல்லப்பட்டால் அதற்கான ரசீது அல்லது மருத்துவமனையின் சிகிச்சைக்கான ஆவணமும் எடுத்து செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்து

தேர்தல் பத்திர நிதி : புதிய தரவுகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

”தேர்தல் பத்திர ஊழல் பாஜகவை அம்பலப்படுத்தியுள்ளது” : ஸ்டாலின்

 

+1
0
+1
1
+1
0
+1
2
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *