சென்னையில் மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மாடுகளை வளர்க்கவோ, சாலையில் விடவோ தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளது.
சமீபகாலமாக சென்னையில் மாடு முட்டி பொதுமக்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவொற்றியூரில் சாலையில் நடந்து சென்ற மதுமதி என்ற பெண்ணை, ஒரு எருமை மாடு முட்டி சுமார் 50 அடி தூரத்திற்கு இழுத்து சென்றது. அவரை காப்பாற்ற வந்தவரையும் மாடு முட்டி தள்ளியது. இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
கடந்த ஆண்டு, திருவல்லிக்கேணி பகுதியில் முதியவர் ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார். குன்றத்தூர் அருகே நேற்று சாலையின் குறுக்கே மாடு வந்ததால் மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்த பூந்தமல்லியை சேர்ந்த மோகன் என்பவர் உயிரிழந்தார்.
அரும்பாக்கத்தில் பள்ளி முடிந்து தாயுடன் வீட்டிற்கு வந்த சிறுமியை மாடு முட்டிய சம்பவமும் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்படி மாடு முட்டி பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகம் நடந்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.
எனினும் சில நாட்களில் அவை மீண்டும் வழக்கம் போல் சாலையில் திரிகின்றன. இந்த நிலையில் சென்னையில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் மாடுகள் திரிவதற்கும், வளர்க்கவும் தடை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “சென்னை மாநகராட்சியில் மாடுகளை வளர்க்க ஏற்கெனவே 2013-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதற்கு தடை பெறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மாடுகளால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், மாடுகளை வளர்ப்பதற்கான கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மாடுகளை வளர்க்கவோ, சாலையில் விடவோ தடை விதிக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
மேலும் மாடுகள் வளர்ப்போர் தங்களுக்கு சொந்தமான காலியிடம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே மாடுகள் வளர்க்க அனுமதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள சென்னை மாநகராட்சி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சட்டமன்றத்தில் 2வது நாளாக கடும் அமளி… அதிமுக வெளிநடப்பு!
”கள்ளச்சாராய விவகாரம்… ஒரு நபர் ஆணையத்தில் உண்மை வெளிவராது” – எடப்பாடி