பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து!

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத், தமிழகத்தில் நாளை (ஜூன் 17) கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்

நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம் – சகோதரத்துவம் அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள்.

ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்பார் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இசுலாமியப் பெருமக்களுக்கு வழிகாட்டுவதே இந்த பக்ரீத் பெருநாள்.

நபிகள் நாயகத்தின் போதனைகள் அன்றாட வாழ்வில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறவழிக்கான அறிவுரைகளாகவே அமைந்திருக்கின்றன. அத்தகைய அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்கின்ற இஸ்லாமிய மக்கள் அனைவரும் இந்த பக்ரீத் பெருநாளை இனிதே கொண்டாடி மகிழ எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

உலகத்தில் உள்ள அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், அன்பு ஆகியவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும். இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக கொண்டாடுகிற பக்ரீத் பண்டிகை தியாகத்தை போற்றுகிற நாளாகும்.

தியாகப் பெருவாழ்வு கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டு வருகிற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

இஸ்லாமியர்களின் தியாகத்தையும், கொடைத்தன்மையையும் போற்றும் பக்ரீத்  திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பக்ரீத் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. அந்த வகையில் இது மனிதநேயத் திருவிழாவும் ஆகும். இறைவனுக்காக மகனையே பலியிடத் துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு  என்பதையே இத்திருவிழா நினைவூட்டுகிறது. தியாகத்தை போற்றுவதே இத்திருநாளின் நோக்கமாகும்.

விசிக தலைவர் திருமாவளவன்

நபிகள் நாயகத்துக்கும் முன்னோடி நபியான இப்ராஹிம் அவர்களின் தியாகத்தைப் போற்றும் நாளாகவே பக்ரீத் நாள் இசுலாமியர்களால் நினைவுகூரப் படுகிறது.

இறைவனின் கட்டளையேற்று தனது அருமை புதல்வனைப் பலியிட்டுக் கறி சமைக்க முனைந்த இப்ராஹிம் நபி அவர்களின் துணிச்சல் மிக்க தியாகத்தையும் இறைப் பற்றுதலையும் அறிந்து இப்ராஹிம் அவர்களைத் தடுத்தாட்கொண்டதாகவும் அவரது மகனைப் பலியிடுதிலிருந்து காப்பாற்றியதாகவும் மாறாக ஆட்டுக்குட்டியைப் பலியிட்டுப் படைத்திட ஆணையிட்டதாகவும் இசுலாமியர்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் அடையாளமே இந்த பக்ரீத் பெருநாள்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

இறைவனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த இறைதூதரின் புனிதத்தையும், அரும்பெரும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் இந்நாளில் சாதி, மத மற்றும் இன வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ நாம் அனைவரும் உறுதியேற்போம்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அரசியல் என்ட்ரி ஆரம்பித்துவிட்டது: சசிகலா பேட்டி!

இவிஎம் மெஷின் பாதுகாப்பானதா? எலான் மஸ்க் – ராஜீவ் சந்திரசேகர் இடையே வார்த்தைப் போர்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts