சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
’ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்திருக்கிறது’ என யூடியூப் சேனல் ஒன்றில் கடந்த ஜூலை 22ம் தேதி, யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து சவுக்கு சங்கர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்தது.
6 மாதச் சிறை:
இந்த வழக்கு மீண்டும் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது,
சவுக்கு சங்கருக்கு 6 மாத காலம் சிறைத் தண்டனை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து அவர் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு கடந்த நவம்பர் 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய 6 மாத கால சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
4 வழக்குகள்:
சிறையில் இருந்து சவுக்கு சங்கர் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீது நிலுவையில் உள்ள 4 வழக்குகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர், அவர் கடந்த நவம்பர் 12ஆம் தேதி எழும்பூர் ஐந்தாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், 4 வழக்குகளில் இருந்தும் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர் தரப்பில், எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று (நவம்பர் 17) மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது, சில நிபந்தனைகளுடன் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெ.பிரகாஷ்
மோர்பி பாலம்: உயர்நீதிமன்றம் எழுப்பிய புதிய கேள்வி?