பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் : உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீமதி தாய் மேல்முறையீடு!

தமிழகம்

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்தும், ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கையை கேட்டும் ஸ்ரீமதி தாய் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியமூரில் தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு தனியார் பள்ளி வளாகம் முன்பு கடந்த 17ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பெரும் கலவரம் வெடித்தது.

பள்ளி வாகனங்கள், பொருட்கள் அனைத்தும் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டதோடு, தீ வைத்தும் கொளுத்தப்பட்டது. 

இந்த வழக்கில் தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்பிரியா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாணவியின் உடல் இரண்டு முறை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனாலும் அந்த அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் கூறியதால் அதனை ஆய்வு செய்ய ஜிப்மர் மருத்துவக்குழுவை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது.

அதன்படி 2 உடற்கூராய்வு அறிக்கையையும் ஆய்வு செய்த ஜிப்மர் மருத்துவக்குழு ஒரு அறிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையை தங்களுக்கு வழங்கவேண்டும் என்று ஸ்ரீமதி பெற்றோர் தரப்பு கேட்டபோது அதற்கு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும் மாணவி மரணத்திற்கும் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகள் கைது செய்யப்பட்டதற்கும்  தொடர்பு இல்லை என்று கூறி உயர் நீதிமன்றம் 5 பேருக்கும் ஜாமீனும் வழங்கியது.

இந்நிலையில் இன்று(செப்டம்பர் 14) ஸ்ரீமதி பெற்றோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என்றும், ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கையை அளிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலை.ரா

நீதிமன்றமே தடைவிதிக்க முடியாதபடி சட்டம் அமைச்சர் ரகுபதி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *